மத்திய அரசின் அலட்சிய போக்கால் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது - யுவராஜா பேட்டி


மத்திய அரசின் அலட்சிய போக்கால் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது - யுவராஜா பேட்டி
x
தினத்தந்தி 23 Sep 2018 10:30 PM GMT (Updated: 23 Sep 2018 7:04 PM GMT)

மத்திய அரசின் அலட்சிய போக்கால் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து வருவதாக திருப்பூரில் த.மா.கா. இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா கூறினார்.

அனுப்பர்பாளையம்,

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச இளம் அரசியல் தலைவர்களின் பார்வை–2019 என்ற நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா தேர்வாகி உள்ளார். இதையடுத்து அவருக்கு த.மா.கா. திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் பாராட்டு விழா காந்திநகரில் உள்ள கட்சி அலுவலகமான மூப்பனார் பவனில் நடைபெற்றது.

விழாவுக்கு மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் யுவராஜாவுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டு வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக இங்குள்ள தொழில் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு வருவதுடன், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று அமைச்சர்கள் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக முதல்– அமைச்சர் உண்மை நிலவரம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

கூடங்குளம் அணு உலைகளில் இருந்து 65 சதவீதம் மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப்படும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் தற்போது 30 சதவீதம் மின்சாரம் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசு மத்திய அரசுடன் பேசி தமிழகத்திற்கு உரிய பங்கீட்டை பெற்று தந்து மின்மிகை மாநிலமாக மாற்ற வேண்டும்.

மத்திய அரசின் அலட்சிய போக்கால் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100–ஐ தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து அனைத்து கட்சிகளும் போராட்டங்கள் நடத்தியும் மத்திய அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது. எனவே மத்திய அரசை கண்டித்து நாளை (இன்று) சென்னையில் மத்திய அரசின் அலுவலகமான எல்.ஐ.சி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் தங்கள் வாடகையை உயர்த்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த பிரச்சினையில் நடுத்தர மக்களின் நிலையை கருத்தில் கொண்டு லாரி உரிமையாளர்கள் வாடகை உயர்வை சிறிது காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story