சட்டம் அனைவருக்கும் சமம்: எச்.ராஜா மீது விரைவில் நடவடிக்கை - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
‘‘சட்டம் அனைவருக்கும் சமம். எச்.ராஜா மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை,
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பான சிறப்பு முகாம் மதுரையில் நேற்று நடந்தது. வாக்குச்சாவடிகளில் அ.தி.மு.க.வினரின் வாக்காளர் சேர்ப்பு பணியினை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு இளைஞர்கள் இடையே அதிக ஆர்வம் உள்ளது. மனு கொடுக்க வந்த ஒரு பெண், பல முறை மனு கொடுத்துள்ளேன். ஆனால் எனது பெயர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று என்னிடம் கூறினார். இது போன்ற குறைகள் இனி வரும் காலங்களில் ஏற்படாதபடி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு கொடுக்கும் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி தகுதியானவர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும்.
தமிழக முதல்–அமைச்சர் மற்றும் காவல்துறையினரை விமர்சித்து பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார். சட்டம் அனைவருக்கும் சமம் தான். யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையை செய்யும். கருணாஸ் விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்து உள்ளது.
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா விவகாரத்திலும் விரைவில் நடவடிக்கை இருக்கும். முதல்–அமைச்சரின் நடவடிக்கையில் பாரபட்சம் இருக்காது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு அ.தி.மு.க. அரசு மதிப்பளிக்கும். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் கொள்கையில் இருந்து சிறிதளவும் பின்வாங்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.