“திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் களப்பணியில் 15 அமைச்சர்கள் ஈடுபடுவார்கள்” அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் களப்பணியில் 15 அமைச்சர்கள் ஈடுபடுவார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை,
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் குறித்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் அவனியாபுரத்தில் நடந்தது. கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:–
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்காக 15 அமைச்சர்கள் களப்பணியில் ஈடுபட உள்ளனர். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தற்போது ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். தூண்டில் போட்டுப்பார்க்கிறார்கள். டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டு இருக்கிறது. அவர்களில் தங்கத்தமிழ்செல்வன், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அவர்கள் அணி தோற்றுவிட்டால் அ.தி.மு.க.வுக்கு வந்துவிடுவதாக சொல்லி இருக்கிறார். தேர்தலுக்கு முன்பாகவே அ.தி.மு.க.வுக்கு வந்து விடுங்கள். அது தான் உங்களுக்கு நல்லது. தேர்தலுக்கு பின்பு வந்தால் உங்களுக்கு மரியாதை இருக்காது. அ.ம.மு.க. கட்சிக்கு இன்னும் அங்கீகாரமே கிடைக்கவில்லை. ஆனால் அவர்களாகவே தற்காலிகமாக கொடியையும், சின்னத்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் வி.வி.ராஜன்செல்லப்பா, சரவணன், பெரியபுள்ளான், மாணிக்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிருபர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. கோட்டை. இந்த தொகுதியில் ஏராளமான நலத்திட்டங்களையும், பல சாதனைகளையும் செய்துள்ளோம். எனவே அ.தி.மு.க. வெற்றி பெறுவது நிச்சயம். எச்.ராஜா மீது முறைப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் முறைப்படி எடுப்பார்கள். பா.ஜ.க. உள்பட யாருக்கும் பயப்பட தேவையில்லை. தமிழகத்தில் கருத்து சுதந்திரம் உள்ளது. ஆனால் தவறாக பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும். முதல்–அமைச்சர் பற்றி, பொது மேடையில் தவறாக பேசியதற்காக கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர் ஒருமுறை சட்டமன்றத்தில் பேசும்போது, ‘நாயுடன் இருந்த என்னை எம்.எல்.ஏ. ஆக்கி இங்கு கொண்டு நிறுத்தியது அ.தி.மு.க. தான்‘ என்று கூறினார். நாயுடன் இருந்ததால் என்னவோ அவருக்கு தற்போது நாய் குணம் வந்துவிட்டது போல.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.