மகாபுஷ்கர விழாவுக்கு போதிய வசதி செய்து தரக்கோரி நெல்லையில் 2–ந் தேதி உண்ணாவிரதம்; பா.ஜனதா மாநில செயற்குழுவில் முடிவு
மகாபுஷ்கர விழாவுக்கு போதிய வசதி செய்து தரக்கோரி நெல்லையில் பா.ஜனதா சார்பில் வருகிற 2–ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் தேசிய இணை அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இல.கணேசன், ஞானபண்டிதன், மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், மாநில செயலாளர் சீனிவாசன், மாநில துணை தலைவர்கள் சுப.நாகராஜன், கரு.நாகராஜன், பி.டி. அரசகுமார், நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், நகர தலைவர் சந்திரன், பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், விவசாய அணி செயலாளர் ஸ்ரீகாந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–
அதிகமாக மணல் அள்ளியதால்தான் முக்கொம்பு அணை பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலைமை கல்லணைக்கும் வரலாம், எனவே அனைத்து ஆறுகளிலும் அணைகள், பாலங்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் சில குறிப்பிட்ட தூரத்திற்கு ஆற்று மணல் அள்ளுவது, குவாரிகள் அமைப்பதை அரசு முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
தமிழக அரசு நீர் மேலாண்மை திட்டத்தை உருவாக்கி போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும், வீராணம் ஏரியை சீர்படுத்த போதுமான நிதியை ஒதுக்கியும் அதனை முழுமையாக பயன்படுத்தாத காரணத்தால் ஏரியின் முழு பயனும் மக்களுக்கு கிடைக்கவில்லை. நபார்டு வங்கி மூலமாக பெறப்படும் நிதியினை பயன்படுத்தி ஏரி, குளத்தினை முழுமையாக பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.
நெல்லை மாவட்டம் தாமிரபரணி நதியில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாபுஷ்கர விழாவில் கலந்து கொண்டு பல லட்சம் மக்கள் 148 கட்டங்களாக நீராடுவது வழக்கம். ஆனால் தற்போது 117 கட்டங்களாக நீராட வேண்டிய நிலை உள்ளது. புஷ்கர விழாவில் பக்தர்கள் சிரமமின்றி நீராட அனைத்து ஏற்பாடுகளை தமிழக அரசு விரைந்து செயல்படுத்திட வலியுறுத்தி வருகிற 2–ந் தேதி நெல்லையில் பா. ஜனதா கட்சி சார்பில் உண்ணாவிரதம் நடைபெறும்.
வரும் காலங்களில் இந்து மக்களின் பண்டிகைகளின் போது தேவையற்ற கட்டுப்பாடுகள் விதிப்பதை தவிர்ப்பதுடன், பாதுகாப்பையும் வழங்கிட வேண்டும். தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக மூட நடவடிக்ரைக எடுக்க வேண்டும். தக்க சமயத்தில் தமிழக அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை அனுப்பிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
கோவை, மதுரை விமான நிலையங்களை சர்வதேச விமான நிலையங்களாக தரம் உயர்த்தி தேவையான பணிகளை தொடங்கிட வேண்டுவதோடு கோவையைச் சுற்றி தொழில் வளம் கருதி திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட விமான சரக்கு போக்குவரத்து முனையம் அமைத்திட வேண்டும். அதே போன்று கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் விமான நிலையம் அமைக்க வேண்டும்.
தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து ஜவ்வரிசி தொழிலில் சிலர் கலப்படம் செய்வதை முற்றிலும் தடுத்திட வேண்டும். தமிழக கோவில் நிர்வாகங்களில் ஊழல்கள் தடுக்கப்பட வேண்டும். இதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.
மேலும் மத்திய அரசின் திட்டங்களை பாராட்டுவது உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட தலைவர் சோலையப்பன் வரவேற்றார். முடிவில் பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.