மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்ட தொடக்க விழா பொன்.ராதாகிருஷ்ணன், தளவாய்சுந்தரம் பங்கேற்பு


மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்ட தொடக்க விழா பொன்.ராதாகிருஷ்ணன், தளவாய்சுந்தரம் பங்கேற்பு
x
தினத்தந்தி 23 Sep 2018 11:00 PM GMT (Updated: 23 Sep 2018 7:55 PM GMT)

நாகர்கோவிலில் மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்ட தொடக்க விழா நடந்தது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.

நாகர்கோவில்,

இந்தியா முழுவதும் உள்ள ஏழை மக்கள் மருத்துவ காப்பீடு பெறும் வகையில் “ஆயுஷ்மான் பாரத்“ என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொடங்கி வைத்தார். மத்திய அரசின் இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக ஏழை மக்கள் ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சையை இலவசமாக பெற முடியும்.

தமிழகத்தை பொருத்தவரை இந்த திட்டம், ஏற்கனவே நடைமுறையில் உள்ள முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்ட தொடக்க விழா நாகர்கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே, சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் செல்வநாயகம், இணை இயக்குனர் மதுசூதனன், வருவாய் அதிகாரி ரேவதி, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் டாக்டர் பாலசுப்பிரமணியம், மருத்துவ கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கிருஷ்ணகுமார், ஜெயசீலன் ஆகியோரும் பங்கேற்றனர்.

விழா நடைபெற்ற மண்டபத்தில் 2 இடங்களில் பெரிய எல்.இ.டி. திரை வைக்கப்பட்டிருந்தன. பிரதமர் நரேந்திரமோடி நாடு முழுவதும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைத்த காட்சி அந்த திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. முன்னதாக விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:-

ஏழை, எளிய மக்களின் சுகாதாரத்தை காக்கும் வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் இனி ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சையை இலவசமாக பெற முடியும். தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் இணைந்து மத்திய அரசின் காப்பீட்டு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

நாடும், நாட்டு மக்களும் சுகாதாரமாக இருந்தால் தான் நாடு வளர்ச்சி பெறும். இதற்காகவே தூய்மை இந்தியா திட்டத்தின் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் நாடு முழுவதும் 8 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. மத்திய அரசு பல்வேறு சுகாதார திட்டங்களை கொண்டுவந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 50 கோடி மக்கள் பயன் அடைவார்கள். இந்த திட்டம் சரியாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

கருணாஸ் கைது செய்யப்பட்டது அவருடைய பாதுகாப்பிற்காக இருக்கலாம். பா.ஜனதாவின் மாநில தலைமை பொறுப்பை ஏற்க தயார் என்று எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறார். பா.ஜனதாவில் அடிமட்ட தொண்டரும் கூட தலைமை பொறுப்பை ஏற்க முடியும் என்பது எஸ்.வி.சேகருக்கு இப்போது தான் தெரிந்திருக்கிறது. குமரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வர்த்தக துறைமுக திட்டம் பற்றி கூறியிருக்க வேண்டும்.“ என்றார்.

Next Story