‘ஏரி வாய்க்காலை தூர்வார சொந்த நிதியை தருவேன்’ கவர்னர் கிரண்பெடி அறிவிப்பு
ஏரி வாய்க்காலை தூர்வார சொந்த நிதியை தருவேன் என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்தார்.
பாகூர்,
மழையின்போது பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 10–க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தென்பெண்ணையாற்றில் இருந்து சித்தேரி வாய்க்கால் வழியாக தண்ணீர் வரும். ஆனால் சித்தேரி வாய்க்காலை தூர்வாராததால் இங்குள்ள ஏரிகள் நிரம்புவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு சித்தேரி வாய்க்காலை பார்வையிட்டு அதனை உடனடியாக தூர்வாருமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார். இதன்பின் கடந்த வாரம் மீண்டும் ஆய்வு செய்ய சென்ற போது வாய்க்கால் தூர்வாராததை கண்டு கவர்னர் கிரண்பெடி அதிருப்தி அடைந்தார். உடனடியாக தூர்வாரும் பணியை தொடங்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன் அடுத்த வாரம் (அதாவது நேற்று) பார்வையிட வருவதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று காலை சித்தேரி வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்ய 3–வது முறையாக கவர்னர் கிரண்பெடி அங்கு வந்தார். அப்போது 50 மீட்டர் மட்டுமே தூர்வாரப்பட்டு இருந்தது. இதை பார்த்த கிரண்பெடி, மீதி பணியை ஏன் மேற்கொள்ளவில்லை என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு, போதிய நிதி இல்லாததால் மேற்கொண்டு பணிகளை தொடர முடியவில்லை என்றனர்.
இதனால் கோபமடைந்த கிரண்பெடி, பொதுப்பணித்துறை மூலம் பல்வேறு பணிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு டெண்டர் விடும்போது, இந்த பணிக்கு மட்டும் நிதி இல்லையா? என்று கேட்டார்.
இதன்பின் வாய்க்கால் தூர்வார என்ன செய்யலாம், எவ்வளவு நிதி செலவாகும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்தினர். அப்போது வாய்க்கால் தூர்வாரும் பணியை 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் மேற்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கிரண்பெடி, அதனை ஏற்கவில்லை. பொக்லைன் எந்திரம் மூலமே வாய்க்கால் தூர்வாரும் பணியை செய்யவேண்டும் என்றார்.
மக்கள் சேவைக்கான நிதி என்ற திட்டத்தில் தனியார் நிறுவனங்களில் இருந்து ரூ.6 லட்சம் பெற்று வாய்க்கால் தூர்வாரும் பணியை விரைவில் தொடங்கவேண்டும். தனியார் நிறுவனங்கள் நிதி அளிக்க முன்வரவில்லை என்றால் அந்த தனது சொந்த பணத்தை தருவதாக கிரண்பெடி கூறினார்.
அப்போது அங்கிருந்த கிராம மக்கள், பாகூர்– கன்னியக்கோவில் சாலையில் உள்ள குப்பைமேட்டில் கொட்டப்படும் குப்பைகள் சாலையோரமாக கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அதனை சுத்தப்படுத்தவேண்டும் என்று கிரண்பெடியிடம் கூறினர். இதுபற்றி நடவடிக்கை எடுக்க கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கிரண்பெடி ஆய்வை முடித்துக்கொண்டு புதுவைக்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி, உள்ளாட்சித்துறை செயலர் ஜவகர், தொழில்துறை செயலர் பாண்டே, ஊரக திட்ட முகமை இயக்குனர் ருத்ர கவுடு, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.