திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் சீமான் பேட்டி


திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் சீமான் பேட்டி
x
தினத்தந்தி 24 Sept 2018 3:15 AM IST (Updated: 24 Sept 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என சீமான் தெரிவித்தார்.

சங்கரன்கோவில்,


சங்கரன்கோவில் வடக்கு ரதவீதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் விடுதலை போராட்ட வீரர்கள் பூலித்தேவன், ஒண்டிவீரன், அழகுமுத்துகோன் புகழ் வணக்க முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. தென்மண்டல செயலாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். வியனரசு, வெற்றிகுமரன், தினகரன், சங்கரன்கோவில் தொகுதி செயலாளர் வெங்கட கணேசு, பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் பசும்பொன், தங்கவேல், வெற்றி சீலன், மாநில இளைஞர் பாசறை கல்யாண சுந்தரம், சுடலை, துரைமுருகன் உள்ளிட்ட பலர் பேசினர்.

இதனை தொடர்ந்து நாம் தமிழர் தலைமை கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சுதந்திர போராட்ட காலங்களில் சாதி, சமுதாயத்திற்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒற்றுமையாக போராடினார்கள். ஆனால் இன்று சுதந்திர போராட்ட வீரர்களை சாதி தலைவர்களாக்கியது வேதனைக்குரியது. தமிழர்களுக்கு இனப்பற்று, மொழிப்பற்றை புகுத்தாமல், சாதிப்பற்றையும் மதப்பற்றையும் புகுத்தி விட்டார்கள். தமிழர்களை அடிமைப்படுத்தியது திராவிடக்கட்சிகளே. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்து டாஸ்மாக்கில் கொள்ளையடித்து வருகிறார்கள். குட்காவுடன் சட்டசபைக்கு சென்ற ஸ்டாலின், ஏன் மதுவை கொண்டு செல்லவில்லை. காமராஜர் ஏராளமான பள்ளிகளை திறந்தார். ஆனால் தற்போதைய அரசாங்கம் டாஸ்மாக் கடைகளை திறந்து வருகிறது. தமிழக அரசு, மத்திய அரசின் அடிமையாக உள்ளது.

இவ்வாறு சீமான் பேசினார்.

கூட்டத்தின் முடிவில், இணை செயலாளர் குமார் நன்றி கூறினார்.

பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறுகையில், 18 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் என்பதே பெரிய கொடுமை. அது அநீதி. கடந்த 10 மாதங்களாக 18 தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்களே இல்லை. இது என்ன ஜனநாயகம். அந்த தொகுதியில் படிக்கும் மாணவர்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் ஒரு கையெழுத்து வாங்க வேண்டுமென்றால் அவன் யாரிடம் சென்று வாங்குவான். இல்லையெனில் 18 சட்டமன்ற தொகுதிகளையும் கலைத்துவிட்டு இடைத்தேர்தல் வைக்க வேண்டியதுதானே. 6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென்பது தேர்தல் விதி. ஆனால் அதைப்பற்றி பேசவே இல்லை. 3-வது அணிக்கு வாய்ப்பில்லை. தனித்து போட்டியிடுகிற நாம் தமிழர் கட்சித்தான் 3-வது அணியாக இருக்கும். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். இடைத்தேர்தல் மட்டுமல்ல, தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்றார். 

Next Story