தமிழகத்தில் இரட்டை சட்டமுறை ஆட்சி நடக்கிறது ; முத்தரசன் பேட்டி
தமிழகத்தில் இரட்டை சட்ட முறை ஆட்சி நடக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். இதுதொடர்பாக நெல்லையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை,
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி சட்டத்தை இருவகையாக பயன்படுத்தி கொண்டிருக்கிறது. நாங்கள் யாருக்கும் அஞ்சி ஆட்சி நடத்தவில்லை, சுதந்திரமாக ஆட்சி நடத்துவதாக எடப்பாடி பழனிசாமி கம்பீரமாக தெரிவித்துள்ளார். ஆனால் நடைமுறையில் அதற்கு நேர்மாறாக இருக்கிறது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, அறநிலைய துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய எச்.ராஜா போலீஸ் பாதுகாப்போடு வலம் வருகிறார். அவர் மீது வழக்குகள் இருந்த போதும், போலீஸ் பாதுகாப்புடன் சென்று கொண்டிருக்கிறார்.
தற்போது, கருணாஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டு உள்ளார். மற்றவர்கள் பேசினால் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் எச்.ராஜா போன்ற பாரதீய ஜனதா கட்சியினர் எப்படி பேசினாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளரை தரம் தாழ்ந்து பேசினார். அவருக்கு கோர்ட்டுகள் முன்ஜாமீன் மறுத்த நிலையிலும் கைது செய்யப்படவில்லை.
தமிழகத்தில் சட்டத்தை இரண்டாக அரசு பயன்படுத்தி வருகிறது. ஒரு சட்டம் மோடி அரசுக்கு பயந்து அஞ்சி நடுங்குகிற சட்டம், இது தவறு செய்யும் பா.ஜனதாவினர் மீது பாயாது. மற்றொன்று எதை எடுத்தாலும் வழக்கு போடுகிற சட்டம் ஆகும். இவ்வாறு இரட்டை சட்ட முறையை எடப்பாடி பழனிசாமி அரசு பின்பற்றி வருவது ஜனநாயகத்துக்கு புறம்பான செயல் ஆகும்.
தமிழ்நாட்டில் நடைபெறுவது ஊழல் ஆட்சி, மத்தியில் அதை விட மோசமான ஊழல் ஆட்சி நடக்கிறது. ரபேல் போர் விமான ஊழல் குறித்து பிரான்ஸ் முன்னாள் அதிபர் வெளிப்படையாக கருத்து தெரிவித்தும் மோடி வாய் திறக்க மறுக்கிறார். இந்த 2 ஆட்சிகளையும் அப்புறப்படுத்த பிரசார இயக்கம் நடத்தி உள்ளோம்.
2 ஆட்சிகளையும் அப்புறப்படுத்தும் பணியை இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story