வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பாக 2-வது கட்டமாக 2,372 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பாக 2-வது கட்டமாக 2,372 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 23 Sep 2018 9:30 PM GMT (Updated: 23 Sep 2018 10:00 PM GMT)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பாக 2-வது கட்டமாக 2,372 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சந்தோஷ்மிஸ்ரா ஆய்வு செய்தார்.

கண்ணமங்கலம்,


தேர்தல் ஆணைய உத்தரவின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 9 லட்சத்து 54 ஆயிரத்து 913 ஆண்கள், 9 லட்சத்து 79 ஆயிரத்து 243 பெண்கள், 65 இதர வாக்காளர்கள் என மொத்தம் 19 லட்சத்து 34 ஆயிரத்து 221 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று 2-வது கட்டமாக மாவட்ட முழுவதும் உள்ள 1,250 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 2,372 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, ஆட்சேபனை தெரிவிக்க தேவையான படிவங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் பெற்றனர். இந்த சிறப்பு முகாமை அந்தந்த பகுதியில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கண்ணமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சிறப்பு முகாமினை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், இ-சேவை மைய ஆணையருமான சந்தோஷ்மிஸ்ரா ஆய்வு செய்தார். அப்போது அவர், புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வந்தவர்களுக்கு திருக்குறள் மற்றும் ‘டிக்ஸ்னரி’ புத்தகங்களை பரிசாக வழங்கினார். அதைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் வாக்காளர் சேர்ப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் உமாமகேஸ்வரி, ஆரணி தாசில்தார் கிருஷ்ணசாமி, போளூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மணி, கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் சுபிசந்தர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதனையடுத்து கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தையும் சந்தோஷ்மிஸ்ரா பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
முன்னதாக அவருக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பூங்கொடி திருமால், துணைத்தலைவர் குமார், கள அலுவலர் மூர்த்தி, செயலாளர் குருநாதன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவர், அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் ஏதேனும் குறைகள் உள்ளதா? என கேட்டறிந்தார்.
ஆய்வின்போது தாசில்தார் தியாகராஜன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். போளூர் தாலுகாவில் உள்ள 177 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடந்தது.

ஆரணி நகரில் ராமகிருஷ்ணாபேட்டை பகுதி சபியுல்லா தெருவில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சந்தோஷ்மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், தேர்தல் உதவி அலுவலர் குமார், வருவாய் ஆய்வாளர்கள் தட்சணாமூர்த்தி, தேவராஜ், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் தேர்தல் பிரிவு, வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். ஆரணி தொகுதியில் உள்ள 311 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது. 

Next Story