கர்நாடக மந்திரிசபை வருகிற 10-ந்தேதிக்குள் விரிவாக்கம்


கர்நாடக மந்திரிசபை வருகிற 10-ந்தேதிக்குள் விரிவாக்கம்
x
தினத்தந்தி 24 Sept 2018 4:26 AM IST (Updated: 24 Sept 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மந்திரிசபை வருகிற 10-ந் தேதிக்குள் விரிவாக்கம் செய்யப்படும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் கூறினார்.

பெங்களூரு,

காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது, பூத் கமிட்டி மட்டத்தில் கட்சியை பலப்படுத்துவது, மக்கள் தொடர்பு முகாம்களை நடத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மத்திய அரசின் தோல்விகளை கண்டித்து போராட்டங்கள் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின் வேணுகோபால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம்களை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த முகாம்கள் வருகிற நவம்பர் மாதம் 19-ந் தேதி வரை நடைபெறும். இதன் மூலம் 18 வயது முதல் 21 வயது உடைய இளைஞர்கள் காங்கிரசில் சேர்க்கப்படுவார்கள். காங்கிரஸ் நிர்வாகிகள் வீடு,வீடாக சென்று தேர்தல் செலவுக்கு நன்கொடையை வசூலிப்பது, பூத் கமிட்டிகள் தலா ரூ.10 ஆயிரம் வசூலித்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த தொகையில் 50 சதவீதம் மாநில காங்கிரஸ் குழுவுக்கும், மீதமுள்ள 50 சதவீதம் அகில இந்திய காங்கிரஸ் குழுவுக்கும் வழங்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். இதற்கான முயற்சிகளில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். மத்தியில் நல்லாட்சியை வழங்குவதில் பா.ஜனதா முழு தோல்வி அடைந்துவிட்டது.

நாட்டில் இப்போது மக்கள் பா.ஜனதாவுக்கு எதிராக திரும்பியுள்ளனர். பிரதமர் மோடி ஊழலில் ஈடுபட்டுள்ளதாக பிரான்சு நாட்டின் முன்னாள் அதிபரே கூறி இருக்கிறார். நாங்கள் மத்தியில் ஆட்சி நடத்தியபோது, 2ஜி அலைக்கற்றையில் ஊழல் நடந்ததாக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டினர். ஆனால் அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.

ரபேல் போர் விமான ஊழல் நாட்டின் மிகப்பெரிய ஊழலாக இருக்கிறது. பா.ஜனதாவுக்கு தற்போது நடுக்கம் ஏற்பட தொடங்கியுள்ளது. ரபேலர் போர் விமான ஊழலை கண்டித்து அக்டோபர் 8-ந் தேதி பெங்களூருவில் பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சென்னை சென்றதாக சொல்கிறார்கள். அவர்கள் சென்னைக்கு சென்றதில் என்ன தவறு உள்ளது?.

சென்னை அழகான நகரம். அதை பார்ப்பதற்காக சென்று இருப்பார்கள். காங்கிரஸ் பலமாக உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள். பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை திட்டத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அக்டோபர் 10-ந் தேதிக்குள் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

இவ்வாறு வேணுகோபால் கூறினார்.

இதில் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், “நாடாளுமன்ற தேர்தலையொட்டி மக்கள் தொடர்பு முகாம்களை நடத்த முடிவு செய்துள்ளோம். அடுத்த மாதம்(அக்டோபர்) முதல் மாவட்ட அளவில் கட்சியின் மாநாடுகள் நடத்தப்படும். கட்சியின் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.


Next Story