கம்பம் அருகே யானைகெஜம் ஓடையில் மணல் அள்ளும் கும்பல்
கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி யானைகெஜம் ஓடையில் மர்ம கும்பல் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பம்,
கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டி கிழக்குப்பகுதி மேகமலை அடிவார பகுதிகளில் சுமார் 25-க்கும் மேற்பட்ட நீரோடைகள் உள்ளன. மேகமலை வனப்பகுதியில் அதிகளவு மழை பெய்யும் போது தண்ணீர் பெருக்கெடுத்து நீரோடைகள் வழியாக யானை கெஜம் ஓடையில் சங்கமித்து சுருளிப்பட்டி முல்லைப்பெரியாறு ஆற்றில் சென்றடையும்.
கடந்த சில ஆண்டுகளாக குறைந்த சதவீத அளவே மழை பெய்ததால் ஓடைகளுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் ஓடைகளை தனிநபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். சிலர் ஓடைகளில் உள்ள மணலை அள்ளி விற்று வந்ததால் நாளடைவில் ஓடை இருந்த சுவடே தெரியாமல் போய் விட்டது. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் மேகமலை பகுதியில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. இதனால் மேகமலை பகுதிகளில் உள்ள ஓடைகள் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி மணல் மேவியது. இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் இரவு பகலாக டிராக்டர் வைத்து மணலை அள்ளி வருகின்றனர்.
குறிப்பாக சுருளிப்பட்டியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் ஊருக்கு ஒதுக்குபுறத்தில் உள்ள யானைகெஜம் ஓடையில் நள்ளிரவு நேரங்களில் மணலை அள்ளி தனியார் நிலங்களில் சேகரித்து வைத்து விட்டு அதிகாலையில் டிப்பர் லாரி, டிராக்டர், மாட்டு வண்டிகளில் அவற்றை அள்ளி சென்று விற்பனை செய்கின்றனர். இவ்வாறு தொடர்ந்து மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே சுருளிப்பட்டி யானைகெஜம் ஓடையில் மர்ம கும்பல் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story