ஷெனாய்நகர் திரு.வி.க. பூங்காவில் ரூ.175 கோடி மதிப்பில் வணிக வளாகம்


ஷெனாய்நகர் திரு.வி.க. பூங்காவில் ரூ.175 கோடி மதிப்பில் வணிக வளாகம்
x
தினத்தந்தி 24 Sept 2018 5:46 AM IST (Updated: 24 Sept 2018 5:46 AM IST)
t-max-icont-min-icon

ஷெனாய் நகர் மெட்ரோ ரெயில் நிலையம் அமைப்பதற்காக சேதப்படுத்தப்பட்ட திரு.வி.க. பூங்காவின் அடியில் ரூ.175 கோடி மதிப்பில் 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் வணிக வளாகம் மற்றும் பூங்கா சீரமைக்கும் பணி நடைபெற உள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னையில் மெட்ரோ ரெயில் இயக்குவதற்காக ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில் பாதைகள் அமைக்கும் போது, அப்பகுதியில் உள்ள சாலைகள், போக்குவரத்து சிக்னல்கள், சாலை தடுப்புகள், நடைபாதைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பூங்கா உள்ளிட்ட பொதுவான சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இவற்றை மெட்ரோ ரெயில் பணிகள் முடிந்த உடன் முறையாக சீரமைத்து தரப்படும் என்று மெட்ரோ ரெயில் நிறுவனம், அரசு துறைகளிடம் ஒப்பந்தம் செய்திருந்தது.

அதன்படி சென்னையில் உள்ள அண்ணாசாலை மற்றும் பூந்தமல்லி சாலைகளில் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக சேதப்படுத்தப்பட்ட சாலைகள், போக்குவரத்து சிக்னல்கள், நடைபாதைகள் போன்றவை ஏற்கனவே இருந்தது போன்று சீரமைத்து தரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வந்த 9 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள திரு.வி.க. பூங்காவின் பூமிக்கடியில் 17 மீட்டர் ஆழத்தில் ஷெனாய் நகர் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணி நடந்து வந்ததால் பூங்கா மூடப்பட்டது.

இதனால் பூங்காவில் நடைபயிற்சி செய்ய முடியாததுடன், சிறுவர்களும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது இந்த பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருவதால், மெட்ரோ ரெயில் நிறுவனம் அளித்த வாக்குறுதிபடி திரு.வி.க. பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்று தற்போது திரு.வி.க. பூங்காவை சீரமைக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் முன்வந்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

ஷெனாய் நகர் மெட்ரோ ரெயில் நிலையம் அமைப்பதற்காக திரு.வி.க. பூங்கா 2010-ம் ஆண்டு மூடப்பட்டது. தற்போது பணிகள் நிறைவடைந்து ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது. தற்போது ஷெனாய் நகர் மெட்ரோ ரெயில் நிலையம் விரிவாக்கம் செய்யும் பணியை தொடங்கி உள்ளோம். அதில் ஒரு பகுதியாக திரு.வி.க. பூங்கா நவீன தரத்தில் மேம்படுத்தப்படும்.

அதன் ஒரு பகுதியாக திரு.வி.க. பூங்காவின் பூமிக்கடியில் ரூ.175 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய வணிக வளாகம் 2 அடுக்கு கொண்ட கட்டிடமாக உருவாகிறது. இந்த வளாகம் 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக உருவாகிறது. முதல்தளத்தில் கார்கள், வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்படுகிறது. இதில் 416 கார்களையும், 856 இரு சக்கர வாகனங்களையும் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. அடுத்த தளத்தில் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யும் வணிக வளாகம் அமைக்கப்படுகிறது.

மேலும், பூமிக்கு மேல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் எழில்மிகு நீருற்று, கூழாங்கற்களிலான நடை பாதை, குழந்தைகள் விளையாடுவதற்கான வசதிகள், டென்னிஸ் மைதானம் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. இவை தவிர நிழல் தரும் மரங்கள், மலர் செடிகளும் வைக்கப்படுகின்றன. பொதுமக்கள் அமர்ந்து ஓய்வு எடுக்கவும் இருக்கைகள் அமைக்கப்படுகின்றன.

அத்துடன் திறந்தவெளி திரையரங்கம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளன. இந்த பூங்கா புதுவடிவம் பெற்றால் ஷெனாய் நகர் பகுதி மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு பூங்காவாகவும் குழந்தைகள் மகிழ்வுடன் விளையாடும் இடமாகவும் இருக்கும். இதற்கான மாதிரி வரைபடங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story