பரமக்குடியில் 17 ஊருணிகளை காணவில்லை; கண்டுபிடிக்கக்கோரி விவசாயி திடீர் தர்ணா
பரமக்குடி நகரசபை பகுதியில் இருந்த 17 ஊருணிகளை காணவில்லை என்பதால் அதனை கண்டுபிடித்து தரக்கோரி விவசாயி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பாம்பூர் அண்ணாநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் இருளன். விவசாயியான இவர் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– பரமக்குடி நகரசபை பகுதியில் கடந்த காலங்களில் சங்கிலி கோர்வை போல ஊருணிகள் இருந்தன. மழைகாலங்களில் தண்ணீர் அடுத்தடுத்து ஓடிவந்து அனைத்து ஊருணிகளையும் நிரப்பி வந்தது. இந்த நிலை ஆக்கிரமிப்பாளர்களின் செயலால் அடியோடு மாறி பல ஊருணிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. அவற்றை உடனடியாக தேடி கண்டுபிடித்து தாருங்கள். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் நகரசபை சார்பில் வழங்கப்பட்ட 17 ஊருணிகளின் படங்களை வைத்து பார்க்கும் போது அவற்றில் பெரும்பாலானவை எங்கு உள்ளது என்றே தெரியாத வகையில் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொத்துக்களை உடனடியாக மீட்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் பருவமழைக்கு முன்பாக அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி 17 ஊருணிகளையும் மீட்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.