விஜயமங்கலத்தில் செயல்படும் 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்; கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் மனு


விஜயமங்கலத்தில் செயல்படும் 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்; கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் மனு
x
தினத்தந்தி 25 Sept 2018 3:45 AM IST (Updated: 24 Sept 2018 9:50 PM IST)
t-max-icont-min-icon

விஜயமங்கலத்தில் செயல்படும் 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

பெருந்துறை ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி தலைவர் சசிதயாள் தலைமையில் அந்த கட்சியினர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

விஜயமங்கலம் பஸ் நிலையம் அருகிலும், பெருமாள் கோவில் அருகிலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளால் பொதுமக்களுக்கு அடிக்கடி இடையூறு ஏற்படுவதால் அதை அகற்றக்கோரி டாஸ்மாக் மேலாளரிடம் கடந்த மாதம் மனு கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் மேற்படி கடையை அகற்றுவதாக டாஸ்மாக் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். ஆனால் இன்றுவரை டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. எனவே மேற்கண்ட 2 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

அந்தியூர் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

எங்கள் ஊரில் ரைஸ்மில் பிரிவில் டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்திற்கு அருகில் 2 கல்லூரிகளும், 2 பள்ளிக்கூடங்களும் செயல்பட்டு வருகின்றன. இங்கு கடை அமைத்தால் குடிமகன்களால் மாணவ –மாணவிகளுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும். எனவே டாஸ்மாக் கடையை வேறு இடத்தில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

வெள்ளோடு அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மாசு அடைந்து விட்டது.

இதனால் நாங்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகிறோம். மேலும் விவசாயம் செய்ய முடியாமல், எங்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘ஈரோடு மாநகர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘பெருந்துறை அருகே மூங்கில்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு உள்ள கிராம சேவை மையத்தை உடனடியாக திறக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஊஞ்சலூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘பொதுமக்களின் வசதிக்காக ஊஞ்சலூர் மற்றும் ஆனங்கூர் கூட்டு பரிசல் துறையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மக்கள் பாதை சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘மாவட்ட அரசு அலுவலகங்களில் பதியப்படும் பதிவேடுகள், கடிதங்கள், ஆணைகள், காலமுறை அறிக்கைகள், நாட்குறிப்புகள், பெயர்பலகைகள், முத்திரைகள் முதலியன அனைத்தும் தமிழிலேயே அமைத்தல் வேண்டும் என்றும், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தமிழிலேயே கையொப்பம் இட வேண்டும் என்றும் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை மீண்டும் நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘ஈரோடு மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 219 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார்.

செய்தியாளர் ஷாலினி, சாலை விபத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து, முதல் –அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையை அவருடைய தந்தை ராஜேந்திரனிடம் மாவட்ட கலெக்டர் கதிரவன் வழங்கினார். கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பிரபாவதி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி ஜெயராமன் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.


Next Story