கொடுமுடி அருகே மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
கொடுமுடி அருகே மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஊஞ்சலூர்,
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள இச்சிப்பாளையம் பகுதியில் கொடுமுடி மண்டல துணை தாசில்தார் பரமசிவம் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின் போது அந்த லாரியில் மணல் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர் கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியை சேர்ந்த லோகநாதன் (வயது 28), என்பதும், இவர் மண்மங்கலம் பகுதியில் இருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூருக்கு லாரியில் மணல் கடத்தி சென்றதும்,’ தெரியவந்தது. இதையடுத்து லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொடுமுடி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
இதேபோல் நேற்று கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூர் பகுதியில் மண்டல துணை தாசில்தார் பரமசிவம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதுடன், டிரைவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், ‘அவர் திருச்சி மாவட்டம் குளித்தலை அருகே உள்ள செவலூர் பகுதியை சேர்ந்த தகமணி (25) என்பதும் மண்மங்கலம் பகுதியில் இருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூருக்கு லாரியில் மணல் கடத்தியதும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து லாரி பறிமுதல் செய்யப்பட்டு கொடுமுடி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.