சின்ன வெங்காய செடிகளுடன் வந்து கலெக்டரிடம் விவசாயிகள் மனு


சின்ன வெங்காய செடிகளுடன் வந்து கலெக்டரிடம் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 24 Sep 2018 11:15 PM GMT (Updated: 24 Sep 2018 7:13 PM GMT)

கோவையில் அழுகிய சின்ன வெங்காயத்துக்கு கொள்முதல் நிலையம் திறக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி சின்ன வெங்காய செடிகளுடன் வந்து விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் நடைபாதை வசதி, முதியோர் ஓய்வூதிய தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தின் போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக்குழு தலைவர் சு.பழனிசாமி தலைமையில், செயலாளர் ஞானசம்பந்தம், துணைத்தலைவர் சக்திவேல் உள்ளிட்ட விவசாயிகள் கைகளில் சின்ன வெங்காய செடிகள் மற்றும் பாக்கு மட்டை தட்டுகளில் சின்ன வெங்காயத்தை கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

கோவை மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலையையொட்டி உள்ள தொண்டாமுத்தூர், நரசீபுரம், போளுவாம்பட்டி, செம்மேடு, நல்லூர் வயல், ஆலாந்துறை, பூலுவப்பட்டி, மாதம்பட்டி, தீத்திப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.

இதற்கு தொழிலாளர்கள் கூலி, உரங்கள், பூச்சிமருந்து என ஒரு ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரை செலவு பிடிக்கிறது. மேலும் ஏக்கருக்கு சராசரியாக 5 முதல் 7 டன் வரை மகசூல் கிடைக்கும். அறுவடை காலத்தின் போது போதிய விலை கிடைக்காததால் சின்ன வெங்காயம் இருப்பு வைக்கப்பட்டு அதிக விலை கிடைக்கும் காலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

கோவையில் தற்போது மழை, வெயில் என மாறி, மாறி சீதோஷ்ண நிலை காணப்படுவதால் இருப்பு வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயம் அழுகி வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கெடுத்து அவர்களுக்கு ஏக்கர் ரூ.1 லட்சம் வரை நஷ்டஈடு வழங்க வேண்டும்.

விவசாயிகளிடம் இருந்து சின்ன வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்யும் வகையில் கோவையில் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை வெங்காயம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எருக்கம்பெனி ஜீவா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்களது குழந்தைகளுடன் வந்து அளித்த மனுவில், ஜீவா நகரில் கடந்த 1979–ம் ஆண்டு முதல் 200 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம். நாங்கள் வீட்டு வசதி வாரியத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.85 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலுத்தி இந்த பகுதியில் வசித்து வருகிறோம்.

தற்போது எங்களது குடியிருப்புகளை காலி செய்துவிட்டு கீரணத்தம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்கு செல்லும்படி அதிகாரிகள் கூறுகின்றனர். எங்களது குழந்தைகள் இந்த பகுதியில்தான் படித்து வருகின்றனர். எனவே எங்களுக்கு கோவை மாநகருக்குள் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

போத்தனூர் ரெயில் பயனாளர் சங்கத்தினர் அளித்த மனுவில், போத்தனூர் ரெயில் நிலையம் மிகப்பெரிய ரெயில் நிலையமாக உள்ளது. இங்கு ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு இடவசதி இருந்தும், போதிய அளவு ரெயில்கள் இங்கு நின்று செல்வது இல்லை. எனவே அனைத்து ரெயில்களும் இங்கு நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இந்த ரெயில் நிலையத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் உள்ளது.

மக்கள் பாதை அமைப்பை சேர்ந்த விக்னேஷ் அளித்த மனுவில், அரசு ஊழியர்கள் அனைவரும் தமிழில் தான் கையெழுத்திட வேண்டும் என்ற அரசாணையை பல ஊழியர்கள் பின்பற்றுவது இல்லை. எனவே அனைத்து அரசு ஊழியர்களும் தமிழில் மட்டுமே கையெழுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருந்தது.


Next Story