ஒளிபரப்பு உரிமையை விற்றுத்தருவதாக பட அதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி வாலிபர் கைது


ஒளிபரப்பு உரிமையை விற்றுத்தருவதாக பட அதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Sept 2018 3:15 AM IST (Updated: 25 Sept 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

தனியார் தொலைகாட்சிக்கு சினிமா படத்திற்கான ஒளிபரப்பு உரிமையை விற்றுத்தருவதாக கூறி படஅதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அடையாறு,

சென்னை வளசரவாக்கம் சின்மயா நகரில் ரூபி பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தை நடத்தி வருபவர் முகமது ஹசிர் (வயது 42). இவர் நடிகர் விதார்த் கதாநாயகனாக நடித்து, ரசிஸ் பாலா டைரக்‌ஷனில் ‘வண்டி’ என்ற படத்தை எடுத்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது.

ராயப்பேட்டை முத்து தெருவை சேர்ந்தவர் மதியழகன் (32). இவர் பிரபல தனியார் தொலைகாட்சி நிறுவனத்தில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் வேலை பார்த்து, 2013-ம் ஆண்டு வேலையில் இருந்து நின்றுவிட்டார். இவர் கடந்த மே மாதம் ‘வண்டி’ திரைப்பட அதிபர் முகமது ஹசிரை சந்தித்து, தான் ஒரு தனியார் தொலைகாட்சியில் பணிபுரிவதாகவும், அந்த டி.வி. சேனலுக்கு வண்டி படத்தின் ஒளிபரப்பு உரிமையை விற்றுத்தருவதாக ஆசைவார்த்தை கூறினார்.

ரூ.25 லட்சம் வேண்டும்

இதனை நம்பிய முகமது ஹசிர் மதியழகனிடம் படம் குறித்த விவரங்களை கொடுத்தார். சில நாட்கள் கழித்து முகமது ஹசிரை சந்தித்த மதியழகன், வண்டி படத்தின் டி.வி. ஒளிபரப்பு உரிமைக்காக ரூ.1 கோடியே 29 லட்சம் என டி.வி. நிறுவனத்தின் பெயரில் போலி கடிதம் ஒன்றை வழங்கினார்.

அதற்கு முகமது ஹசிர், இந்த தொகை மிக குறைவு என்றும், தனது படத்திற்கு ரூ.2 கோடியே 50 லட்சம் வேண்டும் என்றும் கூறினார். அப்படியானால் அதற்கு ரூ.25 லட்சம் நடைமுறை செலவுகள் இருக்கும் என்றும் இது சம்பந்தமான வேலைகளை நான் பார்த்துக்கொள்கிறேன் என மதியழகன் தெரிவித்தார். இதனை நம்பி முகமது ஹசிர் ரூ.25 லட்சம் தர சம்மதித்தார்.

போலி கடிதம்

சில நாட்கள் கழித்து, வண்டி படத்தின் டி.வி. ஒளிபரப்பு உரிமைக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் என குறிப்பிட்டு ஒரு போலி கடிதத்தையும், இந்த படத்திற்கு விளம்பரம் தர இந்துஸ்தான் யுனிலீவர் என்ற நிறுவனம் ஒப்புக்கொண்டதாக ஒரு போலி கடிதத்தையும் மதியழகன் முகமது ஹசிரிடம் வழங்கினார்.

அதனால் முகமது ஹசிர் கடந்த 3 மாதங்களில் பல தவணைகளில் ரூ.17 லட்சத்தை மதியழகன் வங்கிக்கணக்கில் செலுத்தினார். மேலும் ரூ.2 லட்சத்தை நேரிலும் கொடுத்தார். அதன்பின்னர் மதியழகன் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். அவரை தொடர்பு கொள்ள முடியாத முகமது ஹசிர், பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

கைது செய்தனர்

இதுகுறித்து முகமது ஹசிர் மயிலாப்பூர் துணை கமிஷனர் மயில்வாகனனிடம் கடந்த மாதம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் விஸ்வேஸ்வரய்யா மேற்பார்வையில், பட்டினப்பாக்கம் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான தனிப்படையினர் மதியழகனை தேடிவந்தனர்.

அவர் மந்தைவெளி 13-வது டிரஸ்ட் கிராஸ் தெருவில் ஒரு வீட்டில் வசித்து வருவது தெரிந்து, நேற்று அவரது வீட்டருகே போலீசார் மதியழகனை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story