கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை: 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த 2 பேர், 3 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர்.
அடையாறு,
சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் அருகே கடந்த 2014-ம் ஆண்டு தமிழ்ச்செல்வன் என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய இளையகுமார்(வயது 32), ராஜாபூபதி(26) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு இந்த வழக்கில் தொடர்புடைய இளையகுமார் மற்றும் ராஜாபூபதி ஆகிய இருவரும் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தனர். ஆனால் அதன்பின்பு அவர்கள் இருவரும் வழக்கு விசாரணைக்கு ஆஜர்ஆகாமல் தலைமறைவாகி விட்டனர்.
தனிப்படை அமைப்பு
தலைமறைவான இருவரையும் பிடிக்க மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் உத்தரவிட்டார். அதன்படி மயிலாப்பூர் உதவி கமிஷனர் விஸ்வேஸ்வரய்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் இளையகுமார் மற்றும் ராஜாபூபதியை ரகசியமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் இருவரும் கொடுங்கையூர் மற்றும் கொளத்தூரில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
2 பேர் கைது
இதனையடுத்து கொடுங்கையூரில் பதுங்கி இருந்த இளையகுமாரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதேபோல் கொளத்தூரில் பதுங்கி இருந்த ராஜாபூபதியையும் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். பிடிபட்ட இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
கடந்த 3 வருடமாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளிகளை திறமையாக செயல்பட்டு, துப்பு துலக்கி பிடித்த இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவை துணை கமிஷனர் மயில்வாகனன் பாராட்டினார்.
Related Tags :
Next Story