கூடலூர்– ஊட்டி மலைப்பாதையில் கலப்பட தேன் விற்றால் கடும் நடவடிக்கை


கூடலூர்– ஊட்டி மலைப்பாதையில் கலப்பட தேன் விற்றால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 24 Sep 2018 9:30 PM GMT (Updated: 24 Sep 2018 7:18 PM GMT)

கூடலூர்– ஊட்டி மலைப்பாதையில் கலப்பட தேன் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கூடலூர்,

உலக அளவில் சிறந்த உணவு பொருளாக தேன் உள்ளது. அதில் கலோரி, குளுக்கோஸ் அளவு அதிகமாக உள்ளதால், மனிதர்களின் உடலுக்கு நன்மை பயக்கிறது. சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகளவில் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. தேனில் 16 முதல் 18 சதவீதம் வரை நீர்ச்சத்து உள்ளது. கண் பார்வை குறைபாடு, ஆஸ்துமா, இருமல், சளி போன்ற பல்வேறு நோய்களை குணமாக்கும் தன்மை தேனுக்கு உள்ளதாக மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. இதனால் தமிழகத்தில் தேன் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

தேனில் மலைத்தேன், கொம்பு தேன் என பலவகை உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆதிவாசி மக்கள் வனப்பகுதிகளில் தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல் மற்றும் மூலிகை பறித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு, தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரி மலைத்தேன் என்ற பெயரில் கூடலூர்– ஊட்டி மலைப்பாதைகளில் பல இடங்களில் கலப்பட தேன் விற்பனை செய்வதாக சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

நீலகிரி வனப்பகுதியில் சேகரிக்கப்படும் உண்மையான தேனை ஆதிவாசி மக்கள் கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனை செய்கின்றனர். ஆனால் சமவெளி பகுதியில் இருந்து வரும் சிலர் பல மாதங்களாக காய்ந்து போன தேன் அடைகளுடன் சர்க்கரை பாகு கலந்து மலைத்தேன் என கூறி விற்பனை செய்து வருகின்றனர். இதனை நம்பி பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு உணவு பாதுகாப்பு துறையினர் அடிக்கடி ஆய்வு நடத்தி கலப்பட தேன் விற்பனையை கட்டுப்படுத்தி வந்தனர். இதனால் கலப்பட தேன் விற்பனை கட்டுக்குள் இருந்தது. தற்போது அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளாததால் மீண்டும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடம் கூடுதல் விலைக்கு கலப்பட தேன் விற்கும் செயல்கள் அதிகரித்துள்ளது. பொதுவாக தேன் மருத்துவத்துக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதனை நீலகிரி மலைத்தேன் என்று நம்பிக்கையுடன் வாங்கி சென்று ஏமாறுகின்றனர். எனவே அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி கலப்பட தேன் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கூடலூர்– ஊட்டி மலைப்பாதையில் கலப்பட தேன் விற்பனை செய்வது சம்பந்தமாக ஆய்வு நடத்தப்படும். அவ்வாறு கலப்பட தேன் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் நீலகிரியில் கிடைக்கும் தேன் உள்ளிட்ட உணவு பொருட்கள் சாப்பிட உகந்ததாக இருக்கிறதா? என்று பரிசோதிக்க வேண்டும். இந்த விழிப்புணர்வு அவர்களுக்கும் ஏற்படுவது அவசியம் என்றனர்.


Next Story