பொதுமக்கள் எதிர்ப்பால் நிறுத்திவைக்கப்பட்ட கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகள் போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது
சென்னை கொடுங்கையூரில் பொதுமக்கள் எதிர்ப்பால் நிறுத்திவைக்கப்பட்ட ரசாயன கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று தொடங்கியது.
பெரம்பூர்,
சென்னை மாதவரத்தில் தோல் தொழிற்பேட்டை உள்ளது. இந்த தொழிற்பேட்டையில் இயங்கிவரும் தோல் பதனிடும் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீர் அதேபகுதியில் தேங்கி துர்நாற்றம் வீசியது. இதன்மூலம் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால் ரசாயன கழிவுநீரை கண்ணதாசன் நகரில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுசெல்ல திட்டமிடப்பட்டது.
அதன்படி கொடுங்கையூர் காமராஜர் சாலை வழியாக கழிவுநீர் குழாய்களை பூமியில் பதிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது இப்பகுதி பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் ரசாயன கழிவுநீர் குழாய்களை பதிக்கக் கூடாது, இந்த குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் ரசாயன கழிவுநீர் வெளியேறி சருமநோய்கள் ஏற்படும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
போலீஸ் பாதுகாப்புடன்
பின்னர் அப்பகுதி பொதுமக்கள் இந்த பணியை மேற்கொள்ளக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டனர். இதனால் இந்த பணிகள் நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மீண்டும் கழிவுநீரை கொண்டுசெல்லும் பணிகளை தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ரசாயன கழிவுநீர் குழாய்களை பூமியில் பதிக்கும் பணிகளை தொடங்கினார்கள். சம்பவ இடத்தில் பெரம்பூர் தாசில்தார் சைலேந்திரன், புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் தலைமையில் உதவி கமிஷனர் அழகேசன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, பத்மாவதி, மோகன்ராஜ், தெய்வேந்திரன் மற்றும் 60-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story