குடகு மாவட்டத்தில் மீண்டும் கனமழை இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்
குடகு மாவட்டத்தில் நேற்று மீண்டும் கனமழை கொட்டியது. இன்னும் 2 நாட்களுக்கு அங்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடகு,
கர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கிய நாள் முதல் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வந்தது. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பின. குறிப்பாக காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கே.ஆர்.எஸ். அணை(கிருஷ்ணராஜ சாகர்), கபிலா ஆற்றின் குறுக்கே உள்ள கபினி அணை உள்பட அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டின.
இந்த நிலையில் பருவமழை தீவிரமடைந்தது. குறிப்பாக குடகு மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் காவிரி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்தது. இதன்காரணமாக மண்சரிவு, சாலைகள் சேதமடைதல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன.
இதனால் ஆயிரக் கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்தனர். ஏராளமான கிராமங்கள் இருளில் மூழ்கின. பல இடங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டன. மழை வெள்ளத்தால் குடகு மாவட்டமே உருக்குலைந்து போனது. வீடுகள், உடைமைகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நிவாரண பணிகளை அரசு அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் என பலரும் செய்து வருகிறார்கள்.
இன்றளவும் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களிலேயே தங்கி உள்ளனர். அவர்களுக்கு தற்காலிக வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சாலைகள் சீரமைக்கும் பணி, மண்சரிவை சீரமைக்கும் பணி உள்பட குடகு மாவட்டத்தில் அனைத்து சீரமைப்பு பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் மீண்டும் குடகு மாவட்டத்தில் கனமழை பெய்துள்ளது. நேற்று அதிகாலை 3 மணியளவில் பெய்யத்தொடங்கிய மழை, நேற்று மதியம் வரை கொட்டித்தீர்த்தது. இதன்காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களை மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக மண்சரிவு ஏற்பட்டிருந்த இடங்களில் மீண்டும் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது.
இதனால் குடகு மாவட்ட மக்கள் மீண்டும் அச்சம் அடைந்துள்ளனர். மழையால் மாவட்டத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே குடகு மாவட்டத்தில் இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிமை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் குடகு மாவட்ட மக்கள் மீண்டும் மழை வெள்ள பீதியில் உள்ளனர்.
Related Tags :
Next Story