பெங்களூருவில் பயங்கரம் இளைஞர் காங். பிரமுகர் வெட்டிக் கொலை


பெங்களூருவில் பயங்கரம் இளைஞர் காங். பிரமுகர் வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 24 Sep 2018 10:00 PM GMT (Updated: 24 Sep 2018 7:46 PM GMT)

பெங்களூருவில் இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு அல்லாலசந்திரா அருகே வசித்து வந்தவர் அருண்குமார் என்ற அருண் (வயது 27). காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், இளைஞர் காங்கிரசின் அல்லாலசந்திரா பிளாக் தலைவராக இருந்து வந்தார். ரியல்எஸ்டேட் தொழிலிலும் அருண்குமார் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்கள் 2 பேருடன் அருண்குமார் சினிமா பார்க்க யஷ்வந்தபுரத்திற்கு காரில் வந்திருந்தார். அல்லாலசந்திரா கேட் பகுதியில் தன்னுடைய காரை நிறுத்திவிட்டு, நண்பரின் காரில் அவர் சினிமா பார்க்க சென்றிருந்தார்.

படம் பார்த்துவிட்டு நள்ளிரவு 12.15 மணியளவில் அல்லாலசந்திரா கேட் பகுதிக்கு அருண்குமார் தனது நண்பர்களுடன் காரில் வந்து இறங்கினார். பின்னர் அதே பகுதியில் நிறுத்தி இருந்த தனது காரை எடுப்பதற்காக அவர் நடந்து சென்றார். அப்போது அங்கு அரிவாள்களுடன் வந்த மர்மநபர்கள் சிலர் அருண்குமாரை வழிமறித்தார்கள். இதை பார்த்ததும் அங்கிருந்து அவர் ஓட்டம் பிடித்தார்.

இருப்பினும் மர்மநபர்கள் அவரை விடாமல் விரட்டி சென்றதுடன், சிறிது தூரத்தில் வைத்து அருண்குமாரை சுற்றி வளைத்தனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த அரிவாள்களால் மர்மநபர்கள் அருண்குமாரை சரமாரியாக வெட்டினார்கள். இதில், தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அருண்குமாரை காப்பாற்ற ஓடிவந்தனர். அதற்குள் அங்கிருந்து மர்மநபர்கள் தப்பி சென்று விட்டனர்.

உயிருக்கு போராடிய அருண்குமாரை, அவரது நண்பர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அருண்குமார் பரிதாபமாக இறந்து விட்டார். இதுபற்றி அறிந்ததும் எலகங்கா போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அருண்குமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

போலீஸ் விசாரணையில், இளைஞர் காங்கிரஸ் பிளாக் தலைவராக இருந்த அருண்குமார் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அரசியல் காரணங்களுக்காக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். அதே நேரத்தில் ரியல்எஸ்டேட் தொழில் விவகாரத்தில் கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், அருண்குமாரை 4 மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்ததும், அவரை மர்மநபர்கள் விரட்டி செல்லும் காட்சிகள் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.

அந்த காட்சிகள் மூலமாக மர்மநபர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதே நேரத்தில் கொலையாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து வடகிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கலா கிருஷ்ணசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் எலகங்காவில் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

Next Story