காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு - முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் பேட்டி
இரட்டை ஆதாயம் தரும் பதவி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர் நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பியுள்ளது என்று முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுவையில் கடந்த 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. முதல்–அமைச்சராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டார். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 15 பேரில் சபாநாயகர், முதல்–அமைச்சர், 5 அமைச்சர்கள், துணை சபாநாயகர், அரசு கொறடா என 9 பேருக்கு பதவி வழங்கப்பட்டது.
லட்சுமி நாராயணனுக்கு முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் பதவியும், மீதம் உள்ள 5 பேருக்கு வாரியத்தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. தி.மு.க.வை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்களுக்கும் வாரியத்தலைவர் பதவி வழங்கப்பட்டது.
எம்.எல்.ஏ.க்களுக்கு வாரியத்தலைவர் பதவி வழங்கப்பட்ட போது, அவர்கள் இரட்டை ஆதாயம் தரும் பதவி வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. இதனால் அவர்கள் 8 பேரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பினர். இது தொடர்பாக நான் கவர்னர் கிரண்பெடியை சந்தித்து புகார் மனு அளித்தேன். மேலும் ஜனாதிபதியை சந்தித்தும், வாரியத்தலைவர்கள் பதவி வகிக்கும் எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று புகார் மனு அளித்தேன்.
மனுவை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி அதனை மத்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்து கருத்துக்களை அளிக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட 8 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியது. அவர்களும் விளக்கம் அளித்தனர். ஆனால் அவர்கள் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது.
வருகிற 27–ந் தேதிக்குள் தேர்தல் ஆணையம் முன்பு நேரிலோ அல்லது சட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ ஆஜராக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இல்லையென்றால் சம்பந்தப்பட்ட 8 எம்.எல்.ஏ.க்கள் மீதும் எந்த முன்அறிவிப்பும் இன்றி தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறியுள்ளது.
இந்த புகாருக்கு நான் அசல் மனுதாரர் என்பதால் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகளை எனக்கு தெரிவித்துள்ளது. இரட்டை ஆதாயம் பெறும் 8 எம்.எல்.ஏ.க்களின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள். அப்போது புதுவையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்வது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.