வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ஒகேனக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு - ஆத்தூர் கோர்ட்டு உத்தரவு


வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ஒகேனக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு - ஆத்தூர் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 Sept 2018 4:00 AM IST (Updated: 25 Sept 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ஒகேனக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஆத்தூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீரகனூர் சுவேத நதிக்கரையில் தென்கரை ஓரத்தில் வீரகனூர் பேரூராட்சிக்கு சொந்தமான பொதுக்கிணற்றை ஆழப்படுத்தும் பணி கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி நடந்தது. அப்போது கிணற்றில் மண் சரிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கி திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த கூலித்தொழிலாளி சுப்பிரமணியம் (வயது 35) உயிர் இழந்தார்.

இது தொடர்பாக அப்போதைய வீரகனூர் கிராம நிர்வாக அலுவலராக இருந்த கைலாசம் வீரகனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். தற்போது அவர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த வழக்கு விசாரணை ஆத்தூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு ஏற்கனவே இருமுறை சம்மன் அனுப்பியும் இன்ஸ்பெக்டர் முனியசாமி கோர்ட்டில் ஆஜராகவில்லை. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணை ஆத்தூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மீண்டும் நடைபெற்றது.

அப்போதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியசாமி ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து வழக்கை விசாரித்து வரும் மாஜிஸ்திரேட்டு சிவக்குமார், தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.


Next Story