அடிப்படை வசதிகள் குறித்து சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் நீதிபதிகள் ஆய்வு


அடிப்படை வசதிகள் குறித்து சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் நீதிபதிகள் ஆய்வு
x
தினத்தந்தி 24 Sep 2018 11:00 PM GMT (Updated: 24 Sep 2018 10:08 PM GMT)

அடிப்படை வசதிகள் குறித்து சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

சேலம்,

சேலம் மாநகரில் பிரசித்திபெற்ற கோட்டை பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாலை சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ், தலைமை குற்றவியல் நீதிபதி சிவஞானம், உரிமையியல் மாவட்ட நீதிபதி தங்கமணி கணேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். அதைதொடர்ந்து அவர்கள், கோவிலில் அடிப்படை வசதிகள் உள்ளதா? என்றும், பக்தர்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என்பதும் குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் கோவிலில் எழுதப்பட்டிருந்த கல்வெட்டுகள் குறித்து அதிகாரிகளிடம் நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

பின்னர் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி சேலம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆய்வு செய்து வருகிறோம். அப்போது கோவில்களில் அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதாரமாக உள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்கிறோம். இதுவரை 5 கோவில்களில் ஆய்வு செய்துள்ளோம். ஒவ்வொரு கோவிலிலும் சில குறைபாடுகள் உள்ளன.

கோட்டை பெருமாள் கோவிலின் வெளிப்புறங்களில் இடநெருக்கடி ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஆய்வறிக்கையில் குறிப்பிடப்படும். கோவில்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் ஆய்வு செய்ததில் சிலைகள் மாயம் என்ற குற்றச்சாட்டு இல்லை. வருகிற 30-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதால் விரைவாக ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது கோவில் செயல் அலுவலர் குமரவேல் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story