குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் உருக்காலையை மூட வேண்டும் கிராம மக்கள், கலெக்டரிடம் மனு


குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் உருக்காலையை மூட வேண்டும் கிராம மக்கள், கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 24 Sep 2018 10:17 PM GMT (Updated: 24 Sep 2018 10:17 PM GMT)

குடியாத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் அலுமினிய மறுசுழற்சி உருக்காலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக கலெக்டரிடம் கொடுத்தனர். மொத்தம் 400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகளும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளித்தனர்.

காட்பாடி ரெயில் நிலைய வளாகத்தில் டீசல் ஆட்டோ ஓட்டி வரும் டிரைவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், “காட்பாடி ரெயில் நிலைய வளாகத்தில் சுமார் 15 ஆண்டுகளாக 70 பேர் டீசல் ஆட்டோ ஓட்டி வருகிறோம். தற்போது ரெயில் நிலைய வளாகத்தில் ‘ப்ரீபெய்டு’ ஆட்டோ சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 25 டீசல் ஆட்டோக்கள் மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் மீதமுள்ள 45 டீசல் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து டீசல் ஆட்டோக்களும் ‘ப்ரீபெய்டு’ ஆட்டோ சேவை மையத்தின் மூலம் பயணிகளை ஏற்றி செல்ல அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

கே.வி.குப்பத்தை அடுத்த தேவரிஷிகுப்பம் அருகேயுள்ள கெம்மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த முதியவர்கள் அளித்த மனுவில், “எங்கள் பகுதியில் சுமார் 700 பேர் முதியோர் உதவித்தொகை, ஆதரவற்றோர், விதவை உதவித்தொகை பெற்று வருகின்றனர். வங்கி மூலம் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 120 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படவில்லை. அதேபோன்று இந்த மாதமும் இதுவரை 100-க்கும் மேற்பட்டோருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கவில்லை. இது குறித்து வங்கி ஊழியரிடம் கேட்டால், தாசில்தார் அல்லது சம்பந்தப்பட்ட வங்கியில் போய் கேளுங்கள் என்று அலட்சியமாக பதில் கூறுகிறார். தகுதியுடைய அனைத்து முதியோருக்கும் உதவித்தொகை மாதந்தோறும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

வேலூர் மாவட்ட மக்கள் பாதை அமைப்பை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், “அரசு அலுவலகங்களில் பதிவேடுகள், கடிதங்கள், அறிக்கைகள், செய்திக்குறிப்புகள் உள்ளிட்ட அனைத்தும் தமிழில் வெளியிடப்பட்டு, தமிழில் கையெழுத்து இடவேண்டும் என கடந்த 1978-ம் ஆண்டு அரசாணை வெளியானது. ஆனால் பல அரசு அலுவலர்கள் தமிழில் கையெழுத்து போடுவதில்லை. அனைத்து அரசு அதிகாரிகளும் தமிழில் கையெழுத்து போட நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த வேலூர் மாவட்ட நிர்வாகிகள் அளித்த மனுவில், “வேலூர் மாவட்டத்தில் அக்டோபர் மாதம் 2-ந் தேதி கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுவது குறித்து முறையாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் கிராம சபையில் வரவு-செலவு கணக்குகளை முறையாக தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

குடியாத்தம் அருகே உள்ள தண்ணீர்பந்தல் கிராமத்தை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், “எங்கள் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு அருகே அலுமினிய மறுசுழற்சி உருக்காலை இயங்கி வருகிறது. அதில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் குழந்தைகள், முதியவர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் தொழிற்சாலை கழிவுகளால் குடிநீர் மாசுபடுகிறது. தொழிற்சாலை அதிர்வுகளால் வீடுகள் சேதம் அடைகிறது. எனவே குடியிருப்பு அருகே அமைந்துள்ள உருக்காலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறியிருந்தனர்.

குடியாத்தம் தாலுகா மீனூர் கிராம மக்கள் அளித்த மனுவில், “எங்கள் ஊரில் பத்மாவதி தாயார் உடனுறை வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்லும் பாதையை அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து, பக்தர்கள் செல்ல இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராமன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story