சேலத்தில் இன்று அ.தி.மு.க. பொதுக்கூட்டம் - எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்


சேலத்தில் இன்று அ.தி.மு.க. பொதுக்கூட்டம் - எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்
x
தினத்தந்தி 24 Sep 2018 11:45 PM GMT (Updated: 24 Sep 2018 10:30 PM GMT)

தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து சேலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.

சேலம்,

ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் சிங்கள ராணுவத்திற்கு தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அரசு உதவியதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், இதற்கு காரணமான தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினரை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. தலைமை அறிவித்தது.

அதன்படி சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு பொதுக் கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார். இதற்காக அவர் இன்று சேலம் வருகிறார். முன்னதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு சேலம் வருகிறார். மதியம் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் ஓய்வு எடுக்கிறார். மாலை 4 மணிக்கு சேலம் கோட்டை மைதானத்திற்கு வருகிறார். அங்கு கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

கூட்டத்தை முடித்துக்கொண்டு அவர் கார் மூலம் கோவை செல்கிறார். பின்னர் இன்று இரவு 9.30 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருவதையொட்டி, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் தங்கதுரை தலைமையில் மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து, சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈழத்தமிழர் படுகொலைக்கு காரணமான தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். இவர்களின் ஆணைக்கிணங்க இன்று மாலை 4 மணிக்கு சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.

இதில், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன் வரவேற்று பேசுகிறார். எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், காமராஜ், சுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெற்றிவேல், மனோன்மணி, சின்னதம்பி, மருதமுத்து, சித்ரா, ராஜா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். முடிவில் சக்திவேல் எம்.எல்.ஏ. நன்றி கூறுகிறார்.

இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மேயர், அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள், மாநகர், புறநகர் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, வட்டார, பகுதி, பேரூர் செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், கூட்டுறவு வங்கி தலைவர்கள், இயக்குனர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொண்டர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story