ஆதித்தனார் கல்வி நிறுவனங்களில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா


ஆதித்தனார் கல்வி நிறுவனங்களில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 26 Sept 2018 3:30 AM IST (Updated: 25 Sept 2018 11:55 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் கல்வி நிறுவனங்களில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் கல்வி நிறுவனங்களில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ஆதித்தனார் கல்லூரி

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பயின்றோர் கழகம் சார்பில், மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான வினாடி-வினா போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். பயின்றோர் கழக இணை செயலாளர் கதிரேசன் வரவேற்று பேசினார். வணிக நிர்வாகவியல் துறை தலைவர் நாராயணராஜன் வினாடி-வினா போட்டியை நடத்தினார்.

இதில் சாயர்புரம் போப் கல்லூரி மாணவர்கள் கார்த்திக், நினோ அமலன் ஆகியோர் முதலிடமும், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கரையடி முத்து, அருண் ஐசக் ஆகியோர் 2-வது இடமும், திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மாணவிகள் ராதா கஜலட்சுமி, வள்ளி ஆகியோர் 3-வது இடமும் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாள் விழாவில் ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.

ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா நடந்தது. ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி தலைமை தாங்கினார். ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் சுப்பிரமணியம் வாழ்த்தி பேசினார்.

டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் பெருமைகள் குறித்து கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியை ஸ்ரீமதி பேசினார்.

பேச்சு, கவிதை, பாடல், கட்டுரை ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்த மாணவி ஜெனோ கார்த்திகா ‘கனவை நனவாக்கிய பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்’ என்ற தலைப்பில் பேசினார். கவிதை போட்டியில் முதலிடம் பிடித்த மாணவி சுகந்தி ‘சிவந்த வானின் விடியல்’ என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். கணித விரிவுரையாளர் உதய கீதா நன்றி கூறினார்.

நர்சிங் கல்லூரி சார்பில் மருத்துவ முகாம்

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள சிங்கப்பூர் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். டாக்டர்கள் தண்டாயுதபாணி, கோமதிநயினார் ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். ரத்த அழுத்தம், நீரழிவு நோய் பரிசோதனை செய்யப்பட்டது. நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி மற்றும் பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

தரம் வாய்ந்த கல்வி மற்றும் பாதுகாப்பான இருப்பிடத்துடன் கூடிய பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் 2018-2019-ம் ஆண்டின் நிர்வாக இடத்திற்கு மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு 04639-242199, 99949 09422, 94438 72527 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி தெரிவித்து உள்ளார்.

Next Story