தினமும் தாமதமாக வரும் நெல்லை –ஈரோடு பயணிகள் ரெயில்; பயணிகள் கடும் அவதி
நெல்லை–ஈரோடு இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் தினசரி விருதுநகருக்கு தாமதமாக வருவதை தவிர்க்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
விருதுநகர்,
நெல்லையில் இருந்து ஈரோட்டிற்கு பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. காலை 5 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் இந்த ரெயில் காலை 8.20 மணி அளவில் விருதுநகர் வந்து கொண்டு இருந்தது. கடந்த ஆகஸ்ட் 14–ந்தேதி மாற்றப்பட்ட ரெயில்வே கால அட்டவணைப்படி இந்த ரெயில் விருதுநகருக்கு காலை 7.50 மணிக்கு வந்து சேரும் என அறிவிக்கப்பட்டது. விருதுநகரில் இருந்து மதுரை செல்லும் அரசு அலுவலர்கள், மாணவர்கள் இந்த ரெயிலில் தான் வழக்கமாக பயணம் செய்வது உண்டு. மேலும் விருதுநகரில் இருந்து வணிகர்கள், ஈரோட்டிற்கு இந்த ரெயிலில் தான் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சமீபகாலமாக நெல்லை–கோவில்பட்டி இடையே இரட்டை ரெயில்பாதை பணிகள் நடைபெற்று வருவதால் இந்த ரெயில் தொடர்ந்து தாமதமாக விருதுநகர் வந்து சேரும் நிலை உள்ளது. சில நாட்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதம் ஆகும் நிலை இருந்துவருகிறது. நெல்லை, நாகர்கோவிலில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் குறித்த நேரத்தில் விருதுநகர் வந்து சேரும் நிலையில் ஈரோடு பயணிகள் ரெயில் மட்டும் தாமதமாக வருவது ஏன்? என்று தெரியவில்லை. இது பற்றி ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, இருவழி ரெயில்பாதை திட்டப்பணியே காரணமாக கூறும் நிலை உள்ளது. விருதுநகரில் இருந்து அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு குறித்த நேரத்தில் செல்ல வேண்டிய அவசியம் உள்ளவர்கள் ஈரோடு பயணிகள் ரெயிலை நம்பி உள்ளதால் ரெயில்வே நிர்வாகம் இந்த பயணிகள் ரெயில் தினசரி தாமதமாவதை தவிர்த்து கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ளப்படி காலை 7.50 மணிக்கு விருதுநகர் வந்து சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.