நெல்லையில் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் “தர்ணா”
நெல்லையில் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லையில் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் மற்றும் வாரிசுதாரர் நல அமைப்பு நெல்லை மாவட்டம் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நேற்று நடந்தது.
துணை தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தங்கராஜ், எட்டப்பன், ராமையா பாண்டியன், சண்முகநாதன், அலெக்சாண்டர், பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகர்கோவில் செயலாளர் சுந்தர்ராஜன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
36 மாத கால அகவிலைப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதனால் அனைவருக்கும் சரியான முறையில் ஓய்வூதியம் கிடைப்பது இல்லை. எனவே தமிழக அரசு மூலம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
ரத்து செய்ய வேண்டும்
பிரதி மாதம் 1-ந் தேதி ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் பணப்பலன்களை முழுமையாக வழங்க வேண்டும். ஒப்பந்த ஊதிய உயர்வை, ஓய்வூதியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர் இறப்பு நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள் குருசாமி, முத்துக்கிருஷ்ணன், வெங்கடாசலம், பழனி, சேதுராமலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில், தங்கபாண்டியன் நன்றி கூறினார். இந்த போராட்டத்தில் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story