முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்


முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 25 Sep 2018 11:00 PM GMT (Updated: 25 Sep 2018 7:02 PM GMT)

முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி,

ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுனர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதாக ரூ. 1 லட்சம் வீதமும், ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒவ்வொரு நிதியாண்டிலும் வழங்கி வருகிறது.

இது தவிர, விளையாட்டு போட்டிகளை நடத்து பவர்கள், ஆதரவளிக்கும் நிறுவனம், நன்கொடையாள், ஆட்ட நடுவர், நடுவர் உள்ளிட்டோருக்கும் முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு நிதியாண்டிலும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ரூ. 10 ஆயிரத்திற்கு மிகாமல் ஒரு தங்கப்பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய இரண்டு வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். பெண்களுக்கும், பட்டியல் இனத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் படி, 2013-14, 2014-15, 2015-16, 2016-17 மற்றும் 2017-18 ஆகிய நிதியாண்டிற்கான முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள், விருது ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து சாதனைகள் படைத்து தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுக்களில் பதக்கமும், அதாவது உலக கோப்பை, தெற்காசிய விளையாட்டு போட்டிகள், தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் விளையாட்டு போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட சம்பந்தப்படட விளையாட்டு இணையங்களினால் நடத்தப்படும் தேசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களிலும் மற்றும் குழு போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடமும் பெற்றிருக்க வேண்டும்.

விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் உரிய வழிமுறையில் விண்ணப்பங்களை உறுப்பினர் செயலருக்கு சென்று சேரும்படி அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் அடங்கிய உறை மேல் “முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்“ என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமையகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் வருகிற 10-ந் தேதியாகும். இவ்வாறாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story