காரைக்குடியில் கிரைண்டர் கல்லை போட்டு தொழிலாளி கொலை; மகள் கைது
காரைக்குடியில் மதுகுடித்து தகராறு செய்த தொழிலாளியை கிரைண்டர் கல்லை போட்டு அவரது மகளே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காரைக்குடி,
காரைக்குடி கருணாநிதி நகரை சேர்ந்தவர் பிச்சை (வயது 65). இவர் சந்தைப்பேட்டையில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். பிச்சையாவுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் வேலை செய்த கூலியை வீட்டில் கொடுக்காமல், மதுகுடித்து செலவழித்து வந்துள்ளார். மேலும் மதுகுடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்தும் வந்துள்ளார். பிச்சையின் மூத்த மகள் கற்பகவள்ளி (40), இவர் கணவரை பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக தந்தை வீட்டில் இருந்து வருகிறார். கற்பகவள்ளிக்கு 2 மகள்கள் உண்டு. கற்பகவள்ளி தனது தந்தையை மதுகுடித்துவிட்டு வருவதை கண்டித்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பிச்சை மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மீண்டும் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கற்பகவள்ளி கிரைண்டர் கல்லை எடுத்து தந்தை என்று பாராமல் தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பிச்சையை குடும்பத்தினர் கிகிச்சைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்துபோனார்.
இந்த சம்பவம் தொடர்பாக காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கற்பகவள்ளியை கைதுசெய்தனர். தந்தையை மகளே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.