பச்சை தேயிலை வரத்து இல்லை; 2 டேன்டீ தொழிற்சாலைகள் மூடல்


பச்சை தேயிலை வரத்து இல்லை; 2 டேன்டீ தொழிற்சாலைகள் மூடல்
x
தினத்தந்தி 26 Sept 2018 3:30 AM IST (Updated: 26 Sept 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

பச்சை தேயிலை வரத்து இல்லாத காரணத்தால் 2 டேன்டீ தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

குன்னூர்,

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களின் மறுவாழ்வுக்காக டேன்டீ என்ற தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம் உருவாக்கப்பட்டது. நீலகிரியிலும், வால்பாறையிலும் டேன்டீ தேயிலை தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர். டேன்டீ தலைமை அலுவலகம் குன்னூரில் இயங்கி வருகிறது. தற்போது தேயிலை சந்தையில் நிலவும் போட்டியை டேன்டீ நிறுவனத்தால் சமாளிக்க முடியாமல் போய்விட்டது. தரமான தேயிலைக்கு நல்ல விலை என்ற ரீதியில் தனியார்கள் தங்களது தேயிலை தொழிற்சாலையை நவீனப்படுத்தி தரமான தேயிலைத்தூளை உற்பத்தி செய்து வருகின்றனர். ஆனால் அரசுக்கு சொந்தமான டேன்டீ நிறுவனத்தின் தொழிற்சாலைகளை நவீனப்படுத்த போதிய நிதி இல்லை. நிதி வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை உரிய நிதி கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட பணப்பலன்களை முறையாக வழங்கவும் முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

இந்த நிலையில் குன்னூர், குயின்சோலையில் உள்ள டேன்டீ தேயிலை தோட்டங்களில் பறிக்கப்படும் பச்சை தேயிலை கோத்தகிரியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. தேயிலை தொழிற்சாலை இயங்க நாள் ஒன்றுக்கு 14 ஆயிரம் கிலோ பச்சை தேயிலை தேவைப்படும். ஆனால் டேன்டீ தேயிலை தோட்டங்களில் பறிக்கப்படும் பச்சை தேயிலை தனியார் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுவதால் குன்னூர், குயின்சோலையில் செயல்பட்டு வந்த டேன்டீ தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து முற்றிலும் குறைந்துவிட்டது. பச்சை தேயிலை வரத்து இல்லாத காரணத்தால், தற்போது அந்த 2 டேன்டீ தொழிற்சாலைகளும் மூடப்பட்டு விட்டன. இதனால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.


Next Story