என்னை எதிர்த்து போட்டியிட டி.டி.வி.தினகரன் தயாரா? பொதுக்கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் சவால்


என்னை எதிர்த்து போட்டியிட டி.டி.வி.தினகரன் தயாரா? பொதுக்கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் சவால்
x
தினத்தந்தி 26 Sept 2018 4:45 AM IST (Updated: 26 Sept 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

என்னை எதிர்த்து போட்டியிட டி.டி.வி. தினகரன் தயாரா என பொதுக்கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் சவால் விட்டு பேசினார்.

புதுக்கோட்டை,

ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் சிங்கள ராணுவத்திற்கு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அரசு உதவியதன் மூலம், பல்லாயிரக் கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி மாவட்ட அ.தி.மு.க. சார்பில், புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து தலைமை தாங்கினார்.

இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில்:-

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆட்களை திரட்டி வந்து புதுக்கோட்டையில் டி.டி.வி.தினகரன் பொதுக்கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் அவர் என் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி உள்ளார். நெஞ்சில் வஞ்சத்தை வைத்து விஷத்தை அவர் கக்கி உள்ளார். துணிவு இருந்தால் வரும் பொதுத்தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் என்னை எதிர்த்து அவர் போட்டியிட்டு ஜெயிக்க தயாரா? என சவால் விட்டு கேட்கிறேன். டி.டி.வி.தினகரனின் குடும்பத்தில் பல கட்சிகள் முளைத்து உள்ளன. இதேபோல தான் மு.க.ஸ்டாலினின் குடும்பத்தினரும் பல பிரிவுகளாக உள்ளனர். முதலில் உங்கள் குடும்பத்தை சரிசெய்யுங்கள். அதன்பிறகு நாட்டை சரிசெய்யலாம்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் தினகரனுக்கு பணி செய்ததால் பிரச்சினையில் இருக்கிறேன். இயேசு சிலுவையை சுமந்து கொண்டிருப்பதுபோல் நான் பிரச்சினையை சுமந்து கொண்டிருக்கிறேன். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது சசிகலாவின் படத்தையே பயன்படுத்தக்கூடாது என்று கூறியவர்தான் தினகரன்.

அ.தி.மு.க.வில் அட்டைப்பூச்சி போன்று இருந்து அனைத்தையும் உறிஞ்சி எடுத்துவிட்டு தி.மு.க.வுக்கு ஓடிச்சென்று அ.தி.மு.க. மீது வசைபாடுகிறார் ரகுபதி. அ.தி.மு.க. கட்சியையும், தொண்டர்களையும் விமர்சிக்க ரகுபதிக்கு தகுதி கிடையாது. ரகுபதியோ, திருநாவுக்கரசோ, ஆர்.எம். வீரப்பனோ, அ.தி.மு.க.விற்கு ஒரு செங்கலைக்கூட எடுத்து போட்டது கிடையாது. இவர்கள் அனைவரும் அமைச்சராக பதவி காலத்தில் இருந்தபோது, புதுக்கோட்டை மாவட்டத்தின் வளர்ச்சிகாக எதுவும் செய்யவில்லை. இது குறித்து பொதுமேடையில் நான் விவாதம் செய்ய தயாராக இருக்கிறேன். தைரியம் இருந்தால் விவாதத்திற்கு வரட்டும்.

ஜெயலலிதாவினால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் தினகரன். பதவி ஆசையினால் அவர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஊர் ஊராக மேடை போட்டு பேசி வருகிறார். ஒருபோதும் அவரது ஆசை நிறைவேறாது. என்னுடன் பொது மேடையில் விவாதம் செய்ய மு.க.ஸ்டாலினுக்கோ? ரகுபதிக்கோ? தைரியம் உண்டா. கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நான் இரட்டை இலைக்கும், அ.தி.மு.க. விற்கும் விசுவாசமாய் இருப்பேன்.

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தி.மு.க. சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ததாக நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இருந்த மத்திய அரசு இலங்கை போருக்கு உதவியதாக ராஜபக்சே கூறி உள்ளதால், இதற்கு பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் அரசியலை விட்டே விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கந்தர்வகோட்டை தொகுதி ஆறுமுகம் எம்.எல்.ஏ., நகர செயலாளர் பாஸ்கர், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கடையக்குடி திலகர் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story