இலுப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; மாணவர் பலி நண்பர் படுகாயம்


இலுப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; மாணவர் பலி நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 26 Sept 2018 4:15 AM IST (Updated: 26 Sept 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

இலுப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மாணவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயமடைந்தார்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள பூனைகுத்திப்பட்டியை சேர்ந்தவர் உபயசேகர். இவரது மனைவி கலைவாணி. இவர் இலுப்பூர் அருகே உள்ள மாத்திராம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் சஞ்சய்குமார் (வயது 17). இவர் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அதேபகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சரவணக் குமார் (17). நண்பர்களான 2 பேரும், நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில், பூனைகுத்திப்பட்டியில் இருந்து இலுப்பூருக்கு சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை சஞ்சய்குமார் ஓட்டினார். சரவணக்குமார் பின்னால் அமர்ந்து வந்தார். இலுப்பூர் மேலப்பட்டி அருகே புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே புதுக்கோட்டையில் இருந்து மணப்பாறைக்கு மாடுகளை ஏற்றி வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சஞ்சய்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சரவணக்குமார் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்.

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இலுப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த சரவணக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சஞ்சய்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் லாரியில் இருந்த மாடுகளுக்கு எந்தவித காயமும் ஏற்பட்டவில்லை. இதையடுத்து அந்த லாரியில் இருந்த மாடுகளை போலீசார் இறக்கி மாற்று லாரி மூலம் மணப்பாறைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் சிக்கிய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கரூர் மாவட்டம் கடவூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (50) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story