லாஸ்பேட்டை உணவு பொருட்கள் குடோனில் திடீர் தீ விபத்து


லாஸ்பேட்டை உணவு பொருட்கள் குடோனில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 26 Sept 2018 3:30 AM IST (Updated: 26 Sept 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

லாஸ்பேட்டை உணவு பொருட்கள் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ரூ.20லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

புதுச்சேரி,

புதுவை அரியாங்குப்பத்தை அடுத்த மணவெளி பகுதியை சேர்ந்தவர் அமுதரசன்(வயது 30). இவர் பெரிய வணிக நிறுவனங்களுக்கு உணவுப்பொருட்கள் சப்ளை செய்யும் வியாபாரம் செய்து வருகிறார். இதற்காக லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் வாசன்நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பொருட்களை இருப்பு வைத்து குடோனாக நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அமுதரசன் குடோனை மூடி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென குடோனில் இருந்து புகை மூட்டம் வந்தது. இதனை பார்த்த உடன் அருகில் உள்ளவர்கள் இது குறித்து அமுதரசனுக்கும், கோரிமேடு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

உடனே தீயணைப்பு நிலைய அதிகாரி சுந்தரமூர்த்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஒரு வண்டியில் விரைந்து சென்று தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அந்த குடோனில் இருந்த உணவுப்பொருட்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதன் சேத மதிப்பு சுமார் ரூ.20லட்சம் என கூறப்படுகிறது.

இது குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story