பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் திடீர் போராட்டம்; பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் அவதி
பி.ஆர்.டி.சி. ஊழியர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்படாத காரணத்தால் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பி.ஆர்.டி.சி. பஸ்கள் எதுவும் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
புதுச்சேரி,
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தின் சார்பில் (பி.ஆர்.டி.சி) நாள் தோறும் புதுவையில் இருந்து 100–க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்னை, பெங்களூரு, திருப்பதி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கும், புதுவை நகரப்பகுதிகளிலும் இயக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரி பி.ஆர்.டி.சி.யில் நிரந்தர ஊழியர்கள் 450 பேரும், ஒப்பந்த ஊழியர்கள் 250 பேரும் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் புதுவை பி.ஆர்.டி.சி.யில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை இதுதொடர்பாக துறை அதிகாரிகளிடம் ஊழியர்கள் பலமுறை கோரிக்கைவிடுத்தனர். ஆனால் துறை அதிகாரிகள் செவிமடுக்கவில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் புதுச்சேரி பி.ஆர்.டி.சி. அனைத்து தொழிற்சங்கங்கள் போராட்டக்குழுவின் நிர்வாகிகள், பி.ஆர்.டி.சி. துறை அதிகாரிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்த இருந்தனர். இந்த பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் வரவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பி.ஆர்.டி.சி. அனைத்து சங்கங்களும் இணைந்து சம்பளம் வழங்கப்படுவது தொடர்பாக அதிகாரிகள் உறுதி அளிக்கும் வரை பஸ்கள் இயக்கக்கூடாது என முடிவு செய்தனர். அதன்படி நேற்று மாலை 6 மணி முதல் பி.ஆர்.டி.சி. பஸ்கள் இயக்கப்படவில்லை.
புதுவை சாலை போக்குவரத்து கழகத்தில் இருந்து நேற்று பெங்களூரு, திருப்பதி, சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்ல முன்னதாக ‘புக்கிங்’ செய்து பயணத்திற்கு புறப்பட்டு வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதேபோல் புதுவையில் இருந்து நகரப்பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாத காரணத்தாலும் உள்ளூர் பயணிகள் அவதியடைந்தனர். அவர்கள் தனியார் பஸ்களில் பயணம் செய்தனர்.
பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் சம்பளம் பாக்கி பிரச்சினை தொடர்பாக இன்று (புதன்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் அதிகாரிகள் சம்பளம் வழங்குவது குறித்து உறுதி அளித்தால் மட்டுமே பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.