மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்றால் அரசு தாமாகவே முன்வந்து பதவி விலக வேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்றால் அரசு தாமாகவே முன்வந்து பதவி விலக வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ வலியுறுத்தினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநில அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
புதுவை அரசு தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதேபோல் சட்டமன்றத்தில் அறிவித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. பல்வேறு கட்சிகளின் போராட்டங்களுக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி ஆதரவு தெரிவித்து வருகிறார். மக்களுக்கு நம்மை செய்ய வேண்டும் என்று நினைத்தால் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. புதுவை மாநிலத்தில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலை நடத்துவதில் 4 மாதங்களை ஓட்டி விட்டனர்.
புதுவையில் அமைச்சர்களிடம் ஒற்றுமை இல்லை. முதல்–அமைச்சர் நாராயணசாமி, புதுவைக்கு உணவு பதப்படுத்தும் நிறுவனத்தை கொண்டுவர அது தொடர்பான அமைச்சரை சந்தித்து பேச டெல்லிக்கு சென்றார். அப்போது சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் டெல்லிக்கு செல்லவில்லை. ஒவ்வொரு அமைச்சர்களுக்கு இடையே மிகப்பெரிய பனிப்போர் நடக்கிறது.
அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. முதியோர், விதவை உதவித்தொகை பெற 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். ஆனால் இதுவரை ஒருவருக்கு கூட வழங்கவில்லை. இலவச அரிசி வழங்க மொத்தமாக நிதி ஒதுக்கியும் மாதந்தோறும் இலவச அரிசி வழங்குவது இல்லை. மொத்தத்தில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
ஆனால் எதெற்கெடுத்தாலும் கவர்னர் தடுக்கிறார் என கூறி வருகின்றனர். அதையும் மீறி தான் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்றால் தோல்வியை ஏற்றுக்கொண்டு தாமாகவே முன்வந்து அரசு பதவி விலக வேண்டும்.
சட்டசபை செயலாளர் சபாநாயகரின் கைப்பாவையாக இருந்து கொண்டு அனைத்து சட்டமன்ற குழுக்களின் செயல்பாடுகளையும் முடக்கி வருகிறார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வீடுகளுக்கு பொருத்தப்பட்டுள்ள 35 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்களை அகற்றிவிட்டு அதனை வர்த்தக நிறுவனங்களில் பொருத்த வேண்டும் என்று கூறினோம். ஆனால் அதற்கான கோப்பை சட்டசபை செயலாளர் இன்னும் தயாரிக்கவில்லை. இதே நிலை நீடித்தால் சட்டமன்ற குழுவில் நீடிப்பதா? வேண்டாமா? என்பதை யோசிக்க வேண்டிவரும்.
ஆட்சியாளர்கள் தங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஆட்சி அகற்றப்படும். மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி டெபாசிட் இழக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.