திருவொற்றியூரில் வாலிபரை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு சிறுவன் உள்பட 3 பேர் கைது
திருவொற்றியூரில் வாலிபரை கத்தியால் குத்தி செல்போனை பறித்துச் சென்ற சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் ஈசான மூர்த்தி கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25). இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு கார்த்திக் வேலையை முடித்துவிட்டு ஈசான மூர்த்தி கோவில் தெரு எண்ணூர் விரைவு சாலையில் செல்போனில் பேசியபடியே நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 3 பேர் கார்த்திக்கிடம் இருந்து செல்போனை பறிக்க முயற்சித்தனர். ஆனால் கார்த்திக் செல்போனை விடாமல் பிடித்துக்கொண்டு, அவர்களுடன் போராடினார்.
கத்திக்குத்து
இதனால் ஆத்திரமடைந்த 3 பேரில் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்திக்கின் வயிற்றில் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அந்த வாலிபர்கள் கார்த்திக்கின் செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து திருவொற்றியூர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கார்த்திக்கை கத்தியால் குத்திவிட்டு செல்போனை பறித்துச் சென்ற திருவொற்றியூர் ஈசான மூர்த்தி கோவில் தெருவை சேர்ந்த செல்வம் (20), மணலியை சேர்ந்த அஜித் (19) மற்றும் திருவொற்றியூர் ஏகவள்ளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story