சென்னை யானைகவுனியில் சப்-இன்ஸ்பெக்டர் மகள் வேன் மோதி சாவு
சென்னை யானைகவுனியில், சப்-இன்ஸ்பெக்டர் மகள் வேன் மோதி பரிதாபமாக இறந்தார்.
பிராட்வே,
சென்னை வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் துளசிங்கம் (வயது 54). இவரது மனைவி சந்திரா ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களது மகள் ரம்யா (28) நுங்கம்பாக்கத்தில் உள்ள அழகுநிலையம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
ரம்யா நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வேலை முடிந்து ஸ்கூட்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். யானைகவுனி வால்டாக்ஸ் சாலையில் வந்தபோது பின்னால் வந்த வேன் ரம்யா மீது மோதியது. இதில் ரம்யா அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
டிரைவர் கைது
விபத்து தொடர்பாக யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து வேனை ஓட்டிவந்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்த பழனி (49) என்பவரை கைது செய்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் துளசிங்கத்தின் மாமனார் ரத்தினம் (65). இவருக்கு யானைகவுனி திருப்பள்ளி தெருவில் வீடு உள்ளது. இந்த வீடு சம்பந்தமாக மாமனார், மருமகனுக்கு இடையே சொத்து பிரச்சினை உள்ளதாக கூறப்படுகிறது.
கொல்லப்பட்டதாக புகார்
இந்நிலையில், துளசிங்கம் யானைகவுனி போக்குவரத்து போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனது மகளின் மரணம் தற்செயலாக நடந்த விபத்தாக தெரியவில்லை. தனது மாமனார் ரத்தினம், அவரது மகன் எத்திராஜ் ஆகியோரால் திட்டமிட்டு, விபத்தை ஏற்படுத்தி நடத்தப்பட்ட கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கிறேன். எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.
இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story