ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் திடீர் சாவு மேலும் இருவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
காட்கோபரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். மேலும் 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மும்பை,
காட்கோபரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். மேலும் 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திடீர் உடல் நலக்குறைவு
மும்பை காட்கோபர் காமராஜ் நகர் குடிசை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் இந்தர் யாதவ். இவருக்கு ரோகித் (வயது12), கிருஷ்ணா (8), கிஷோர் (4) என்ற 3 மகன்களும், நந்தன் (3) என்ற மகளும் இருந்தனர். நேற்று இவர்கள் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது அதிகாலை 3 மணியளவில், திடீரென சிறுமி நந்தனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்தர் யாதவும், அவரது மனைவியும் அவளை சிகிச்சைக்காக ராஜவாடி மருத்துவமனையில் சேர்த்தனர்.
2 குழந்தைகள் சாவு
இந்த நிலையில், காலையில் மகன்கள் 3 பேரும் அடுத்தடுத்து மயக்கம் போட்டு விழுந்தனர். இதனால் பதறி போன கணவர், மனைவி இருவரும் அவர்களையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிறுமி நந்தனும், சிறுவன் கிஷோரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த பந்த்நகர் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ரோகித், கிருஷ்ணா இருவருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
2 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்தது காமராஜ் நகரில் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் குழந்தைகளின் சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story