தேவிகாபுரத்தில் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகை
தேவிகாபுரத்தில் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேத்துப்பட்டு,
சேத்துப்பட்டு அருகே தேவிகாபுரம் கிராமத்தில் மலையம்புரவரை செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையால் அந்த பகுதி மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று இந்து முன்னணி பொறுப்பாளர் சுரேஷ் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, அதனை அகற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் நரசிம்மன், வருவாய் ஆய்வாளர் பிரியா, கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story