‘அ.தி.மு.க.வை பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை’ - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்


‘அ.தி.மு.க.வை பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை’ - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
x
தினத்தந்தி 26 Sept 2018 5:00 AM IST (Updated: 26 Sept 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வை பற்றி பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்று சேலத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசத்துடன் கூறினார்.

சேலம்,

சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று மாலை கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் சிங்கள ராணுவத்திற்கு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அரசு உதவியதின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், இதற்கு காரணமான தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினரை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்கக்கோரி இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநில கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் வரவேற்றார். பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சக்திவேல், வெற்றிவேல், மனோன்மணி, சித்ரா, சின்னதம்பி, மருதமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் சிங்கள ராணுவத்திற்கு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அரசு உதவியதின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அது மிகவும் துயரமான சம்பவம். யாரும் மறந்துவிடமுடியாது. அண்மையில் இந்தியாவிற்கு வந்திருந்த ராஜபக்சே, இலங்கையில் நடந்த ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடந்த போர் பற்றி மிக தெளிவாக கூறினார்.

அவர் கூறியதால் இலங்கையில் என்ன நடந்தது? என்பது பற்றிய உண்மை தற்போது வெளிச்சத்துக்கு வந்தது. இதனால் நாட்டு மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதற்காக தற்போது அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டங்களை நடத்துகிறோம். இலங்கையில் போர் முடிந்துவிட்டது என்று கருதி பதுங்கு குழியிலும், வீட்டிற்குள்ளேயும் பதுங்கி இருந்த ஈழத்தமிழர்கள் வெளியே வந்தார்கள். ஆனால் அதை பயன்படுத்தி முன்னாள் அதிபர் ராஜபக்சே விமானம் மூலமாக குண்டு மழை பொழிந்து அப்பாவி ஈழத்தமிழர்களை கொன்று குவித்தனர்.

அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, 3½ மணி நேரம் உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார். பின்னர் அங்கு போர் நிறுத்தப்பட்டுவிட்டதாக மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று ஒரு வாக்குறுதி அளித்தார்.

அதை தமிழக மக்களும் நம்பினார்கள். ஆனால் அங்கு லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அதற்கு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அரசுகள் துணைபோனது. இதனால் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடந்த போர் சம்பந்தமாக நடந்த உண்மையை மத்திய அரசுக்கும், சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

சமீபத்தில் சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும்போது, அ.தி.மு.க. அரசு ஏதோ தவறு செய்ததுபோல் பேசிவிட்டு சென்றிருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் எந்த தவறும் நடைபெறவில்லை. எல்லா துறைகளிலும் சிறப்பான முறையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. தி.மு.க.வை பொறுத்தவரையில் அங்கு குடும்ப சண்டை நடக்கிறது. தி.மு.க. ஒரு கட்சி அல்ல. அது ஒரு கம்பெனி போல் செயல்படுகிறது.

சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மறைவுக்கு பின் வீரபாண்டி ராஜா, ஈரோட்டில் என்.கே.பெரியசாமியை தொடர்ந்து அவரது மகன் என்.கே.கே.பி.ராஜாவும், திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமியை தொடர்ந்து அவரது மகனும் தற்போது பழனி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வில் அப்படி இல்லை.

இந்த இயக்கத்தில் சாதாரண தொண்டன் கூட பெரிய பதவிக்கு வரமுடியும். கருணாநிதியால் அவரது மகன் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ. வாகவும், அமைச்சராகவும் ஆக முடிந்தது. அ.தி.மு.க.வில் விசுவாசமாகவும், உண்மையாகவும் யார் இருக்கிறார்களோ? அவர்களால் நிச்சயம் உயர் பதவிக்கு வரமுடியும். நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்.

தி.மு.க. ஆட்சியில் சட்டசபையில் ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, அவரது சேலையை பிடித்து ஒரு அமைச்சர் இழுத்தார். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் அவர் இருந்தார். அதேபோல், எம்.ஜி.ஆர்.பேசும்போது அவரது மைக்கை பிடிங்கினார்கள். ஆனால் அந்த இரு பெரும் தலைவர்களும் மீண்டும் சட்டசபைக்கு வந்தால், முதல்-அமைச்சராகத்தான் வருவேன் என்று கூறி சென்றார்கள். அதன்பிறகு அவர்களை தமிழக மக்கள் நேசித்து ஆதரவு அளித்தனர். அதனால் அவர்கள் முதல்-அமைச்சர்களாக வரமுடிந்தது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.

என்னை பார்த்து மு.க.ஸ்டாலின் பேடி என்கிறார். யார் பேடி என்று மக்களுக்கு தெரியும். எடப்பாடி தொகுதியில் 9 முறை தேர்தலில் நின்றேன். ஆனால் நீங்கள் அப்படியா? தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுகிறீர்கள். நாங்கள் மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளோம். மு.க.ஸ்டாலினுக்கு பதவி வெறி பிடித்திருக்கிறது. ஆனால் கனவிலும் கூட முதல்-அமைச்சராக ஆகமுடியாது. அது ஒருபோதும் நடக்காது. நான் சாதாரண கிளை செயலாளராக இருந்து படிப்படியாக உயர்ந்து, கட்சிக்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் இருந்த காரணத்தினால் தற்போது முதல்-அமைச்சராக உயர்ந்திருக்கிறேன். அ.தி.மு.க.வை பற்றி பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. மக்களின் ஆதரவோடு அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை ஒழித்துவிட வேண்டும் எனவும், இந்த ஆட்சியை கலைத்துவிட வேண்டும் என்றும் தி.மு.க. முயற்சி செய்தது. ஆனால் நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று ஒரு வருடம் 7 மாதம் ஆகியும் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதனால் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். எங்களுக்கு மடியில் கனம் இல்லை. இதனால் வழியில் பயம் இல்லை. நெடுஞ்சாலைத்துறையில் எனது நெருங்கிய உறவினருக்கு நிறைய பணிகளுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதாக புகார் கூறி வருகிறார்கள். மு.க.ஸ்டாலின் கூறும், ராமலிங்கம் கம்பெனிக்கு 2010-ம் ஆண்டில் தி.மு.க.ஆட்சி காலத்திலேயே 10 பணிகளுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு தெரியாதா?.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் அந்த ஒப்பந்ததாரர் எனக்கு உறவினராக வந்தார். அவர் இப்போது மட்டுமல்ல தி.மு.க. ஆட்சியிலும் அதிகளவில் ஒப்பந்தம் எடுத்து பணிகளை செய்து கொடுத்துள்ளார். தற்போது உலக வங்கி மூலம் ஆன்லைன் டெண்டர் விடப்படுகிறது. நாங்கள் நேர்மையாக ஒப்பந்த பணிகளை விடுகிறோம். ஆன்லைனில் நடப்பதால் எவ்வித முறைகேடும் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. தற்போது பொதுப்பணித்துறையில் 294 பணிகளுக்கு ஆன்லைன் மூலம் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.ஆட்சி காலத்தில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் ஊழல் நடந்ததாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதாவது, ரூ.200 கோடிக்கு போடப்பட்ட ஒப்பந்தம், அதன்பிறகு மாற்றி அமைத்து ரூ.465 கோடியாக உயர்த்தி திட்டமிடப்பட்டது. இது இப்போது தான் எனக்கு தெரியவந்தது. இனிமேல் தான் உங்களது ஆட்டம் ஒவ்வொன்றாக தெரியவரும். திட்டமிட்டு குறை சொல்ல வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே அ.தி.மு.க. ஆட்சி மீது வீண்பழி சுமத்துகிறார்கள். ஊழலுக்காகவே தி.மு.க.ஆட்சி கலைக்கப்பட்டது. இதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். தமிழகத்தில் மின்வெட்டு எப்படி இருந்தது. அ.தி.மு.க.ஆட்சிக்கு வந்தவுடன் அது சரிசெய்யப்பட்டது.

தமிழக பொருளாதார மேம்பாட்டிற்காக வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. அதில் ரூ.74 ஆயிரம் கோடி முதலீடு செய்ய சிலர் முன்வந்துள்ளார்கள். ஆனால் ரூ.2½ லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் சுமார் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நாட்டின் பொருளாதாரம் மேம்படையும். இதுபோல் உலக தொழில் முதலீட்டாளர்களின் மாநாடு தி.மு.க. ஆட்சியில் நடத்தியது உண்டா? மக்களின் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும் உழைக்கிற இயக்கம் அ.தி.மு.க. மட்டுமே. ஆனால் தி.மு.க.அப்படி கிடையாது. பதவிக்கு வந்தவுடன் மக்களை மறந்து விடுவார்கள்.

1996-2001-ஆம் ஆண்டில் மத்தியில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது, அவர்களோடு தி.மு.க. கூட்டணி வைத்தது. அப்போது தெரியாதா? பா.ஜனதா மதவாத கட்சி என்று? ஆனால் இப்போது அவர்கள் கூறிவருகிறார்கள். மத்தியில் பா.ஜனதாவுக்கு சரிவு ஏற்பட்டபோது, காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. அங்கம் வகிக்க தொடங்கியது. ஆனால் தற்போது நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணியில் இல்லை. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக மத்திய பா.ஜனதாவுடன் இணக்கமாக இருக்கிறோம். அவ்வாறு இருந்தால் தான் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியும். நன்மைகள் இருந்தால் ஆதரவு அளிப்போம்.

அதேபோல் தமிழக மக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அதை எதிர்ப்போம். காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.பி.க்கள் 23 நாட்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து முடக்கினார்கள். 2007-ம் ஆண்டே காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வெளியானது. அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. அந்த தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. அதாவது 50 ஆண்டு கால காவிரி பிரச்சினை அ.தி.மு.க. ஆட்சியில் தான் முடிவுக்கு வந்தது. காவிரி மட்டுமின்றி பாலாறு, முல்லைப்பெரியாறு பிரச்சினையிலும் அ.தி.மு.க.தான் குரல் கொடுத்தது.

டி.டி.வி. தினகரன் குடும்பத்தில் ஆளுக்கொருவர் ஒரு கட்சியை தொடங்கி வருகின்றனர். ஜெயலலிதாவை கவனிப்பதற்காக சசிகலா உள்ளே வந்தார். நாம் எல்லாம் உழைப்பாலே கட்சிக்கு வந்தோம். ஆனால் டி.டி.வி.தினகரன் குறுக்கு வழியில் உள்ளே நுழைந்தார். அவரை ஜெயலலிதா கட்சியில் இருந்தே நீக்கி விட்டார்கள்.கட்சியில் இருந்து நீக்கி 10 ஆண்டுகள் ஆகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவர் ஒரு கட்சியை தொடங்கி நான் தான் அ.தி.மு.க. என்று கூறுகிறார். அப்போது நாம் எல்லாம் யாரு?.

ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி விபத்தில் வந்த வெற்றியாகும். அவர் எப்படி வெற்றி பெற்றார்? என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். அதனால் தான் அந்த தொகுதிக்கே அவரால் செல்ல முடியவில்லை. கட்சிக்கு துரோகம் செய்தவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மாவிடாது. விரைவில் பாராளுமன்றம் அல்லது உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. எந்த தேர்தலாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். கடுமையாக உழைத்து தேர்தலில் வெற்றிபெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.



Next Story