மங்கலம் அருகே மின்சாரம் தாக்கி தாய்-மகன் பலி


மங்கலம் அருகே மின்சாரம் தாக்கி தாய்-மகன் பலி
x
தினத்தந்தி 26 Sept 2018 3:30 AM IST (Updated: 26 Sept 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

மங்கலம் அருகே மின்சாரம் தாக்கி தாய், மகன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

கலசபாக்கம், 


கலசபாக்கத்தை அடுத்த மங்கலம் அருகே உள்ள வடஆண்டாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் திருமலை, தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (வயது 35). இவர்களின் மகன் சாரதி (14). இவர் சேரியந்தல் பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை லட்சுமி துணிகளை துவைத்து விட்டு, வீட்டின் வெளியே கயிறு கட்டி துணிகளை உலர்த்துவதற்காக பள்ளம் தோண்டி பெரிய இரும்பு கம்பியை நட்டார். இதற்கு சாரதி உதவியாக இருந்து உள்ளார். இரும்பு கம்பியை நடும்போது மேலே சென்ற உயர் மின்னழுத்த வயர் இருப்பதை லட்சுமியும், அவரது மகன் சாரதியும் கவனிக்காமல் இருந்து உள்ளனர். அப்போது அந்த கம்பி திடீரென மின்வயர் மீது உரசியது. இதில் மின்சாரம் தாக்கி லட்சுமிக்கும், சாரதிக்கும் படுகாயம் ஏற்பட்டது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் கண்ணகி அங்கு வந்து, அவர்களை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது.

இதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சாரதி மற்றும் கண்ணகியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சாரதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story