பாலாற்றில் பயங்கரம் : கார் டிரைவர் முகம் சிதைத்து படுகொலை


பாலாற்றில் பயங்கரம் : கார் டிரைவர் முகம் சிதைத்து படுகொலை
x
தினத்தந்தி 26 Sept 2018 3:30 AM IST (Updated: 26 Sept 2018 4:30 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் பாலாற்றில் கார் டிரைவர் கத்தியால் குத்தப்பட்டு, பாறாங்கற்களால்முகம் சிதைக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காட்பாடி, 


காட்பாடி காங்கேயநல்லூரில் இருந்து சத்துவாச்சாரிக்கு பாலாறுப்பாதை வழியாக செல்லலாம். இந்த பாதையில் ஆற்றுக்குள் நேற்று காலை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டும், முகம் சிதைக்கப்பட்ட நிலையிலும் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொலை நடந்த இடத்தின் அருகே ரத்தக்கறையுடன் 2 வாழைத்தார் தண்டுகள், உடைந்த கண்ணாடி பாட்டில் துண்டுகள் கிடந்தன. கொலை செய்யப்பட்டவர் யார் என அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக, மர்மநபர்கள் வாலிபரின் முகத்தில் கத்தியால் குத்தியும், பாறாங்கற்களால் சிதைத்தும் உள்ளனர். மேலும் அவரின் செல்போனில் இருந்த சிம்கார்டையும் எடுத்து சென்றுள்ளனர். வாலிபரின் கையில் ‘சரவணன்‘ மற்றும் ‘சரண்யா‘ என்ற பெயர்கள் பச்சை குத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? என தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட வாலிபர் வேலூர் மாநகராட்சி சைதாப்பேட்டையை சேர்ந்த சின்ன கவுண்டர் தெருவை பிச்சைபெருமாள் (வயது 26) என்பதும், கார் டிரைவராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. மேலும் பிச்சைபெருமாள், ரவுடி கும்பலுடன் தொடர்பில் இருந்ததும், அவர் மீது வேலூர் வடக்கு, தெற்கு, சத்துவாச்சாரி போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு உள்பட பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

குடும்ப தகராறில் பிச்சைபெருமாள் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது கடத்தி பாலாற்றுக்கு கொண்டு வந்து கொலை செய்தார்களா? அல்லது கூட்டாளிகளுக்குள் ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவில்லை. கொலையாளிகள், இவரது செல்போனில் இருந்த சிம்கார்டை எடுத்து சென்றுள்ளனர். சிம்கார்டில் இருக்கும் தொலைபேசி அழைப்புகள் மூலம் போலீசார் கைது செய்துவிடுவார்கள் என முன்எச்சரிக்கையாக அவ்வாறு எடுத்து சென்றிருக்கலாம் என தெரிகிறது.

இந்த நிலையில் பிச்சைபெருமாளை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கும்பலை பிடிக்க போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

கார் டிரைவர் முகம் சிதைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story