தாராபுரத்தில் ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி


தாராபுரத்தில் ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 26 Sept 2018 4:31 AM IST (Updated: 26 Sept 2018 4:31 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தாராபுரம்,

தாராபுரத்தில் ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் நல்லூர் அருகே உள்ள காசிபாளையத்தைச் சேர்ந்தவர் அலாவுதீன். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் சதாம்(வயது 19). இவர் காசிப்பாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று காசிப்பாளையம் பகுதியில் மின்தடை என்பதால் அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான பனியன் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன.

இதனால் சதாம், தனது நண்பர்களான திருப்பூரை சேர்ந்த ஜெகன்(18), சாகுல்(22), பாரூக்(27) மற்றும் திருச்சியை சேர்ந்த 13 வயதுடைய சிறுவனுடன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் தாராபுரத்துக்கு வந்தனர். பின்னர் அனைவரும் அம்மாமடுவு பகுதிக்கு சென்று அங்கு அமராவதி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர்.

இதில் சதாம் சற்று ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததாக தெரிகிறது. அவருக்கு நீச்சல் தெரியாததால் சதாம் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். மேலும் அவர், ‘காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...’ என்று சத்தம்போட்டுள்ளார். இதை பார்த்த அவருடைய நண்பர்கள் அவரை காப்பற்ற முயற்சி செய்துள்ளனர். அதற்குள் சதாம் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார்.

இதனால் இதுபற்றி தாரா புரம் போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜ ஜெயசிம்மராவ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி சதாமின் உடலை தேடினார்கள். சுமார் 5 மணி நேரம் தேடியும் அவருடைய உடல் கிடைக்கவில்லை. இரவு நேரம் ஆகிவிட்டதால் சதாமின் உடலை தேடும் பணி நிறுத்தப்பட்டது. சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அமராவதி ஆற்றில் குளிக்கச் செல்லும் வாலிபர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்து போகிறார்கள்.

இதை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் நேற்று ஒரு வாலிபரின் உயிரை காப்பாற்றி இருக்க முடியும்.

அமராவதி ஆற்றில் கடந்த 10 நாட்களில் மட்டும் தண்ணீரில் மூழ்கி 3 பேர் பலியாகியுள்ளனர். இனியும் காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமராவதி ஆற்றில் ஆபத்தான பகுதிகளில் குளிப்பதற்கு தடைவிதிப்பதோடு, தண்ணீரில் மூழ்கி பலியாவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story