இலங்கை தமிழர் படுகொலைக்கு காங்கிரஸ், தி.மு.க. தான் காரணம்
இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காங்கிரஸ், தி.மு.க. தான் காரணம் என்று வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாடநூல் கழக தலைவர் வளர்மதி பேசினார்.
வேலூர்,
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கி பேசினார். லோகநாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. வரவேற்றார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இலங்கையில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான போராட்டத்தின்போது இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சியளிக்கப்பட்டது. மன்மோகன்சிங், கருணாநிதி ஆகியோர் ஆட்சிக்காலத்தில்தான் இந்த பயிற்சியளிக்கப்பட்டது. அதற்கு ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார்.
சமீபத்தில் டெல்லியில் பேட்டியளித்த ராஜபக்சே இந்திய அரசு உதவியுடன்தான் இலங்கை போரில் வெற்றிபெற்றதாக கூறியிருக்கிறார். இலங்கை தமிழர்களை கொல்ல காங்கிரஸ், தி.மு.க. உதவியதற்கு ராஜபக்சே கூறியதே சான்றாக உள்ளது. ராஜீவ்காந்தி கொலைக்கைதிகள் 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்று ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் திருநாவுக்கரசர் எதிராக கருத்து தெரிவிக்கிறார். அவர்கள் இருவரும் ஒரேமேடையில் கூட்டாக கருத்து தெரிவிக்க வேண்டும்.
ஜெயலலிதா இறந்ததும் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று ஸ்டாலின் கூறிவந்தார். ஊர் ஊராக சென்று சொல்லி வந்தார். அதுபலிக்கவில்லை. இந்த கட்சி உடைந்துவிடும் என்று நினைத்தார்கள். இந்த இயக்கத்தை யாராலும் அசைக்கமுடியாது. ஆலமர விழுதுகள் போன்று இந்த ஆட்சியையும், இயக்கத்தையும் எடப்பாடி பழனிசாமி காத்து வருகிறார்.
50 ரூபாய் பிரியாணிக்காக சண்டைபோடும் ரவுடி கட்சியாக தி.மு.க. மாறிவிட்டது. ஆனால் அ.தி.மு.க. இயக்கத்தை தூக்கிபிடிப்பவர்கள் தொண்டர்கள்தான். இந்த இயக்கம் எனக்கு பின்னாலும் 100 ஆண்டுகள் இருக்கும் என்று ஜெயலலிதா கூறினார். அதேபோன்று இந்த இயக்கம் நிமிர்ந்து நிற்கிறது.
1996 தேர்தலில் அ.தி.மு.க. தோற்றது. அப்போது ஒரு குடும்பத்தை காட்டி இந்த குடும்பத்தால்தான் தோற்றோம் என்று ஜெயலலிதா கூறினார். இப்போது அவர்களுடன் இருப்பவர்கள் பணத்திற்காகவும், பதவிக்காகவும் இருப்பவர்கள். வாயால் வடைசுடும் ஒருவர் ஊர்ஊராக சுற்றி ஊழல்பற்றி பேசிவருகிறார். அவர் ஒருதீயசக்தி. ஊழல்பற்றி பேச அவருக்கு தகுதியில்லை. அவருக்கு நீங்கள் சரியான பாடம் புகட்டவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வி.எஸ்.விஜய், முகமதுஜான், ஒன்றிய செயலாளர்கள் கோ.வி.சம்பத் (ஆலங்காயம்), எம்.கே.ராஜா (நாட்டறம்பள்ளி), சி.செல்வம் (திருப்பத்தூர்), வாணியம்பாடி நகர செயலாளர் ஜி.சதாசிவம், பேரூராட்சி செயலாளர்கள் டி.பாண்டியன் (ஆலங்காயம்), கே.பிச்சாண்டி (உதயேந்திரம்), கூட்டுறவு கட்டிட சங்க தலைவர் முகமது காசிப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story