ஓய்வுபெற்ற அரசு அதிகாரி, தூக்குப்போட்டு தற்கொலை


ஓய்வுபெற்ற அரசு அதிகாரி, தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 Sep 2018 10:00 PM GMT (Updated: 25 Sep 2018 11:38 PM GMT)

கடலூர் கூத்தப்பாக்கத்தில் போலீஸ் ஐ.ஜி.யின், ஓய்வுபெற்ற நேர்முக உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

கடலூர், 

கடலூர் கூத்தப்பாக்கம் ராமானுஜம் நகரை சேர்ந்தவர் முகமது சபியுல்லா(வயது 60). இவர் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

இந்த நிலையில் நேற்று காலையில் முகமது சபியுல்லா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் அறிந்து வந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தும் பொதுமக்கள் அங்கே திரண்டனர்.


பின்னர் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்த முகமது சபியுல்லாவின் உடலை போலீசார் இறக்கி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முகமது சபியுல்லாவின் மனைவி இறந்து விட்டார். மகன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இதனால் முகமது சபியுல்லா மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து வீட்டின் அறையை போலீசார் சோதனை செய்தபோது முகமது சபியுல்லா எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கு ஏற்பட்ட சிறுநீரக பிரச்சினை நான் சாகும்வரை நீடிக்கும் என்றே எனக்கு தோன்றுகிறது. எவருடைய நிழலிலும் நான் வாழ விரும்பவில்லை. என்மனம் ஒத்துக்கொள்ளவும் இல்லை.
எனவே நான் தற்கொலை செய்ய முடிவெடுத்துவிட்டேன். என் அண்ணனுக்கு தெரிவித்து அழைத்துக்கொள். குடும்ப நலனில் அக்கரை உள்ள கலாவதி என்பவருக்கும் தெரிவித்துவிடு, மும்தாஜூக்கும் தகவல் கொடுத்துவிடு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த கடிதத்தை யாருக்கு எழுதியுள்ளார், அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறுநீரக கோளாறு காரணமாக போலீஸ் ஐ.ஜி.யின் ஓய்வுபெற்ற உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூத்தப்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story