கள்ளத்தனமாக இலங்கை செல்ல முயன்ற பெண் உள்பட 3 பேர் கைது
தங்கச்சிமடம் வழியாக கள்ளத்தனமாக இலங்கை செல்ல முயன்ற இலங்கை பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் வில்லூண்டி மாந்தோப்பு பகுதியில் கள்ளத்தனமாக அகதிகள் இலங்கை செல்ல திட்டமிட்டுஉள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து உதவி ஆணையர் ராஜ்குமார் மோசஸ் உத்தரவின்பேரில் கண்காணிப்பாளர்கள் முனியசாமி, பிரேம்பாபு உள்ளிட்டோர் அந்த பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்று நோட்டமிட்டனர்.
அப்போது அந்த பகுதியில் அதிகாரிகளை கண்டதும் மர்ம நபர்கள் சிலர் தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தியபோது அந்த பகுதிக்கு தனியாக வந்த நபரை பிடித்து விசாரித்ததில் தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த ராயப்பன் மகன் ஆல்ட்ரின்(வயது 42) என்பது தெரிந்தது. இவரிடம் நடத்திய விசாரணையில் இலங்கை பெண் ஒருவரை இலங்கைக்கு கள்ளத்தனமாக படகில் அழைத்து செல்ல வந்ததாகவும் இலங்கை ஏஜெண்டு வேறொரு நாளில் வரச்சொன்னதால் அந்த பெண்ணை ராமேசுவரத்தில் தங்க வைத்துள்ளதாகவும், இங்கிருந்து செல்லும்போது தவறவிட்ட பர்சை எடுப்பதற்காக வந்ததாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அவரை பிடித்து, அதிகாரிகள் ராமேசுவரத்திற்கு சென்று விடுதியில் தங்கியிருந்த இலங்கை பெண்ணையும், அவரை காரில் அழைத்து செல்ல வந்த திருச்சி மொரைசிட்டி 2–வது குறுக்குத்தெருவை சேர்ந்த மருதை மகன் சந்திரவேல்(58) என்பவரையும் மடக்கி பிடித்தனர். இவர்கள் 3 பேரையும் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து விடிய விடிய விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில் பிடிபட்ட இலங்கை பெண் கொழும்பு வெல்லவத்தை மகேஸ்வரி நகர் பாலசிங்கம் மனைவி ரமணி என்பது தெரிந்தது. இவரின் 3 மகள்கள் மாணவர்களுக்கான விசாவில் இந்தியா வந்து படித்துள்ளனர். அவர்களை பார்ப்பதற்காக சுற்றுலா விசாவில் வந்த ரமணி விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக திருச்சி ஸ்ரீனிவாசநகர் 8–வது குறுக்கு தெருவில் தங்கிஇருந்துள்ளார். இந்திய குடியுரிமைக்காக கோவை முகவரியை போலியாக கொடுத்து ஆதார் கார்டு பெற்றுள்ளார்.
இலங்கையில் கணவருக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்பிலான சொத்தை குடும்பத்தினர் விற்பனை செய்ததில் தங்களுக்குரிய பங்கினை பெறுவதற்காக இலங்கை செல்ல திட்டமிட்டுள்ளார். பாஸ்போர்ட்டு தொலைந்துவிட்டதால் கள்ளத்தனமாக செல்ல உதவி செய்யுமாறு கனடாவில் உள்ள தனது தம்பி சுதாகரிடம் கூறினார். அவரது ஏற்பாட்டின்பேரில் இலங்கையில் உள்ள ராபர்ட், தங்கச்சிமடம் மாந்தோப்பு ஆல்ட்ரின் ஆகியோர் உதவி செய்துள்ளனர்.
இதன்படி ரமணி ஏஜெண்டு ஆல்ட்ரினிடம் ரூ.30,000 வாடகை பேசி முன்பணமாக ரூ.10,000 கொடுத்துள்ளார். இந்திய எல்லையில் ஒப்படைத்ததும் மீதி பணம் தருவதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இலங்கை செல்வதற்காக திருச்சியில் இருந்து கார் டிரைவர் சந்திரவேல் உதவியுடன் காரில் ரமணி வந்துள்ளார்.
தங்கச்சிமடம் கடற்கரையில் இருந்து ஆல்ட்ரின் மூலம் படகில் சென்றபோது சில நிமிடங்களில் இலங்கையில் இருந்து தொடர்பு கொண்ட ராபர்ட் தற்போது சூழ்நிலை சரியில்லாததால் வேறொரு நாளில் அழைத்துவரும்படி கூறியுள்ளார். இதனால் படகினை திருப்பி வந்து கடற்கரையில் இறங்கி அங்கிருந்து மீண்டும் காரில் ஏறி ராமேசுவரம் சென்ற நிலையில் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர். இந்த விவரங்களை சேகரித்த சுங்கத்துறையினர் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.