வீரப்பன் கூட்டாளிகள் விடுதலையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும்; அரசு வக்கீல் பேட்டி
வீரப்பன் கூட்டாளிகள் 9 பேரின் விடுதலையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அரசு வக்கீல் கூறினார்.
கடத்தூர்,
கன்னட நடிகர் ராஜ்குமார் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தொட்டகாஜனூரில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் கடந்த 2000–ம் ஆண்டு ஜூலை மாதம் 30–ந் தேதி தங்கியிருந்தார். அப்போது சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் அங்கு வந்து அவரை கடத்திச்சென்றார்கள். 108 நாட்கள் பிணைக்கைதியாக வைக்கப்பட்டு பின்னர் ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரப்பன் கூட்டாளிகள் சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து இதுகுறித்த வழக்கு கோபி கோர்ட்டில் நடந்து வந்தது.
கடந்த 18 ஆண்டுகளாக கோபி கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வீரப்பன் கூட்டாளிகளான கோவிந்தராஜ் (வயது 46), அன்றில் (45), பசுவண்ணா (57), புட்டுசாமி (53), கல்மண்டிராமன் (52), மாரன் (48), செல்வம் (43), அமிர்தலிங்கம் (44), நாகராஜ் (47) ஆகிய 9 பேரையும் விடுதலை செய்து நீதிபதி மணி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் தனக்கோட்டிராம் கோபியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்த வழக்கு தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலம் சம்பந்தப்பட்டது. அதனால் தீர்ப்பின் நகலை பெற்று, இருமாநில அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் இதுகுறித்து பேசி முடிவு செய்யப்படும். அதன்பிறகு வீரப்பன் கூட்டாளிகள் 9 பேரின் விடுதலையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.